Also Watch
Read this
By: Web Team

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் பொறுமையாக விமர்சனம் செய்வதுடன், வெளி நடப்பு செய்யும் போது கூட சிரித்தபடி செல்வார் எனக்கூறி வாழ்த்தினார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்க கூடிய நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பொறுத்தவரை கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் அன்போடு அமைதியோடு பேசக் கூடியவர். அவர் கோபமாகப் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், அவர் விமர்சனங்களை செய்யும் போதுகூட பொறுமையாக அமைதியாகத் தான் பேசுவார். வெளிநடப்பு செய்யும்போதுகூட சிரித்துக்கொண்டே யாருக்கும் எந்த கோபமும் வராத வகையில் அணுகக்கூடியவர்.
அப்படிப்பட்ட ஒரு சிறந்த அரசியல்வாதியாக விளங்கிக் கொண்டிருக்கும் நயினார் நாகேந்திரன், 64 முடிந்து 65வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
அவருக்கு எனது சார்பில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதனையடுத்து, அமைச்சர் முத்துசாமிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "எங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக்கூடிய முத்துசாமிக்கும் இன்று பிறந்தநாள். அவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
அடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ”பேரவை சார்பில் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved