Also Watch
Read this
இன்று ஜூலை-18, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பதிவிட்டு உள்ளனர்.

மெட்ராஸ் மாகாணமாக இருந்து...
இந்தியா, மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது தமிழ் மொழி பேசும் மக்களும் தனி மாநிலத்தவராக பிரிக்கப்பட்டனர். ஆனால், அன்றைய காலத்தில் தமிழ்நாடு எனக் கூறாமல், மெட்ராஸ் மாகாணமாக அதாவது மெட்ராஸ் ஸ்டேட் ஆக, அதிகாரப்பூர்வமாக இருந்தது.

இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை நீக்கி விட்டு, தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டம் 2 மாதங்களை தாண்டிய நிலையில் 76ஆம் நாளில் உயிரிழந்தார். அதன்பிறகு 1957ல், மெட்ராஸ் ஸ்டேட் - தமிழ்நாடு என பெயர் வைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில், திமுக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த தீர்மானமும் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

சட்டப்பேரவையில் தீர்மானம்
தொடர்ந்து, மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றுவதற்கு அரசியல் ரீதியாக பல வாதங்களும், போராட்டங்களும் அரங்கேறின. 1967ல் அண்ணா ஆட்சி பொறுப்பேற்றபோது, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு, தமிழ்நாடு அரசு - தலைமை செயலகம் என பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.

அடுத்ததாக 1968ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர், தமிழ்நாடு என பெயர் மாற்றுவதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தீர்மானம் நவம்பர் 23ல் நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது. அதை தொடர்ந்து 1969ல் ஜனவரி 14ம் தேதி சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது.

ஜூலை 18 தமிழ்நாடு நாள்
அன்றில் இருந்து இன்றுவரை தமிழ்நாடு என்ற பெயரே அதிகாரப்பூர்வமாக உள்ளது. ஜூலை 18ஆம் தேதி அறிஞர் அண்ணாவால் சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட அந்த நாளே, தமிழ்நாடு நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என்று கடந்த திமுக ஆட்சியின் போது 2021ல் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளுக்கான வாழ்த்துக்களை முதலமைச்சர் விஜய் தெரிவித்து கொண்டார்.

நவம்பர் ஒன்றாம் தேதியும்...
இதில், இன்னொரு கவனிக்க கூடிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு மாநிலமும் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நவம்பர் ஒன்றாம் தேதியை மாநிலத்தின் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ்நாடு மட்டுமே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை கொண்டாடுகிறது. இதன் அடிப்படையிலயே தமிழ்நாட்டின் நாளையும், மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நவம்பர் ஒன்றையும் தவெக அரசு கொண்டாடும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருக்கிறார்.