Also Watch
Read this
By: Web Team

கோவையில் மயானத்தில் புதைக்கப்பட்டவரின் உடலில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை 3 பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விற்கும் விலையிலும், அதனை பொருட்படுத்தாமல் தந்தை ஆசைப்பட்டு அணிந்திருந்த சங்கலியை கழற்ற வேண்டாம் என்ற மகனின் சென்டிமெண்ட் கடைசியில் திருட்டில் முடிந்துள்ளது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். மீன் டாலர் பதித்த மூன்றரை சவரன் தங்க சங்கலியை அணிந்தபடி ஏரியாவுக்குள் கெத்தாக வலம் வந்த நாகராஜ், கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த மகன் வெங்கடேஷ், இறுதிச் சடங்கின்போது தந்தை ஆசைப்பட்டு அணிந்திருந்த தங்க சங்கிலியை கழட்ட வேண்டாம் என சென்டிமெண்டாக உறவினர்களிடம் கூற அவர்களும் நகையை கழட்டாமல் இறுதி சடங்குகளை மேற்கொண்டதை தொடர்ந்து, நாகராஜின் உடல் சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தந்தை புதைக்கப்பட்ட இடத்தில் கல்லறை அமைக்க திட்டமிட்டிருந்த வெங்கடேஷ், 16 ஆவது நாள் காரியத்திற்காக இடத்தை சுத்தம் செய்ய உறவினர்களுடன் மயானத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தந்தையின் உடல் புதைக்கபட்ட இடத்தில் குழி தோண்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், மயானத்தில் இருக்கும் கார்த்திக் என்பவரைப் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நாகராஜின் வீட்டின் அருகில் வசிக்கும் அவரது உறவினர்களான சக்திவேல், மணிகண்டன் ஆகியோரே உடனின்று காரியங்களை செய்வது போல் நடித்து இரவில் யாருக்கும் தெரியாமல் வந்து உடலை தோண்டி எடுத்து நகையை திருடி சென்றதாக தெரியவந்தது. சரிவர வேலைக்கு செல்லாமல் பணத்திற்கு திண்டாடிய இருவரும், பணத்தாசையில் நாகராஜின் நகையை திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவு மாயனத்திற்கு சென்ற இருவரும், மயானத்தில் வேலைசெய்யும் கார்த்திக்கும் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரையும் தங்கள் வலையில் சிக்கி வைத்தனர். பின்னர் நாகராஜின் உடலைத் தோண்டி எடுத்து, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைத் திருடியவர்கள், அதனை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடையில் விற்று உருக்கியதுதெரியவந்தது. இது தொடர்பாக வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், சக்திவேல், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.