news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அன்று அனிதா கோவையில் அனுகீர்த்தனா சேலத்தில் கோபிகா
tv

Also Watch

tv

Read this

அன்று அனிதா கோவையில் அனுகீர்த்தனா சேலத்தில் கோபிகா

நீட் தேர்வால் தொடரும் சோகம்

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீட் தேர்வு அச்சத்தால் அரங்கேறிய விபரீத படலம், அரியலூர் அனிதாவில் தொடங்கி, கோவை அனு கீர்த்தனா, சேலம் கோபிகா வரை நீண்டுள்ளது. நீட் மறுதேர்வு அச்சத்தால் நாடு முழுவதும் 12 பேர் உயிலை மாய்த்துக் கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 நாட்கள் இடைவெளியில் 2 மாணவிகள் உயிரை மாய்த்துள்ளது பலரது மனதையும் ரணமாக்கி உள்ளது.

மாணவர்களுக்கு பேரிடி
நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடந்த மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது, மருத்துவர் கனவில் இருந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பேரிடியாக அமைந்தது. கடைசி முயற்சியில் நிச்சயம் மருத்துவர் ஆகி விடுவேன் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவர்களும், நகை-நிலம் அடகு வைத்து நீட் கோச்சிங்கிற்கு செலுத்திய பணம் வீணாகாது என்ற நம்பிக்கையில் இருந்த பெற்றோரும் பேரதிர்ச்சி அடைந்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21, நீட் மறுதேர்வு நடைபெற உள்ள சூழலில், நீட் மறுதேர்வு அச்சத்தால் டெல்லி, டேராடூன், ராஜஸ்தான் என நாடு முழுவதும் 12 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில் தமிழ்நாட்டிலும் அது தொடர்வது பெற்றோரை பதற வைத்துள்ளது.

கோவையில் அதிர்ச்சி...
கோவை மாவட்டம், கோவைப்புதூர் பாரூக் நகரைச் சேர்ந்த செந்தில்பிரபுவின் 19 வயது மூத்த மகள் அனு கீர்த்தனா கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாற்ற வேண்டும், பலருக்கும் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற கனவில் இருந்ததால், பிளஸ் டூ முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அதற்காக 2 முறை நீட் தேர்வை எதிர்கொண்ட அனுகீர்த்தனாவுக்கு தோல்வியே கிடைத்தது. ஆனாலும் துவளாத மாணவி, மே 3 ஆம் தேதி நடந்த தேர்வையும் எழுதினார். ஆனால், அந்த தேர்வு ரத்தானதால் சோகத்தில் மூழ்கிய மாணவி, மறுதேர்வு எழுதும் மனநிலையில் இருந்தே மாறி மனக்குழப்பத்திற்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், தலைவலிக்கு தேய்க்க பயன்படுத்தப்படும் திரவ வடிவிலான தைலத்தை குடித்தார்.

அதிர்ச்சி... பேரதிர்ச்சி...
பின்னர், தனது தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் நள்ளிரவில் வாட்ஸ்அப்பில் எஸ்எம்எஸ் அனுப்பிய அனுகீர்த்தனா, மறுதேர்வில் தன்னால் வெற்றி பெற முடியுமா? என தெரியவில்லை, லட்சக்கணக்கில் செலவழித்து படிக்க வைத்த அப்பா முகத்தில் எப்படி விழிப்பேன்? அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் உங்களுக்கு மகளாக பிறக்கக் கூடாது, ஏனென்றால் என்னால் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு விட்டீர்கள் அப்பா என உருக்கமாக எழுதி இருந்தார். இதனை பார்த்து பதறிப் போன பெற்றோர் மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் சேலத்திலும் ஒரு மாணவி நீட் மறுதேர்வு பயத்தால் தனது உயிரை மாய்த்துள்ளார்.

3ஆவது முறையாக...
எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர்-புவனேஸ்வரி தம்பதியின் 19 வயது மகள் கோபிகா கடந்த 2024ஆம் ஆண்டு கோட்டை அரசு பள்ளியில் பிளஸ் டூ முடித்தார். 440 மதிப்பெண் பெற்றவர் டாக்டராக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் 2 முறை நீட் தேர்வு எழுதினார். ஆனால் வெற்றி பெற முடியாததால் 3ஆவது முறை முழு உழைப்பையும் செலுத்தி, படித்து தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருந்தார். இதனிடையே எழுதிய தேர்வு ரத்தாகி மறுதேர்வு என கூறப்பட்டதால் விரக்தியடைந்தார்.

சிதறியது கவனம்...
ஏற்கெனவே எழுதிய தேர்வை மலைபோல் நம்பி இருந்த கோபிகாவால் மறுதேர்வில் கவனம் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து, முடி திருத்தும் தொழில் செய்யும் தன் தந்தையிடம் அடிக்கடி புலம்பி வந்ததாகவும் தெரிகிறது. அவரும், நல்லதே நடக்கும், அதையும் மீறி என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், மாற்றுப் படிப்புக்கான ஏற்பாட்டை செய்துள்ளேன், அதனால் உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என மகளை தேற்றி வந்துள்ளார். ஆனாலும், உழன்று கொண்டிருந்தார் கோபிகா.

கடந்த 16ஆம் தேதி பிறந்த தினம்
வெள்ளாளபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்த கோபிகா, தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனிடையே, மகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் பாட்டி வீட்டிற்கே நேரில் சென்ற தந்தை சேகர், உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் மகள் உயிரை மாய்த்தது தெரியவந்துள்ளது. கடந்த 16ஆம் தேதி தான் தனது மகள் பிறந்த நாளை கொண்டாடியதாகவும், தேர்வு குறித்த பயம் வேண்டாம் என பலமுறை அறிவுரை கூறியும் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

ஆழ்ந்த இரங்கல்... தற்கொலை தீர்வல்ல...
தமிழ்நாட்டில் 2 நாள் இடைவெளியில் 2 மாணவிகள் நீட் மறுதேர்வு அச்சத்தால் விபரீத முடிவு எடுத்துள்ள நிலையில், எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என அறிவுரை கூறும் மனநல மருத்துவர்கள், அதையும் மீறி உயிரை மாய்க்கும் எண்ணம் தோன்றினால் அதற்கான தடுப்பு உதவி எண்களை அழைத்து பேசலாம் எனக் கூறி வருகின்றனர்.


Related Link
நீட் மறு தேர்வு, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

நீட் மறு தேர்வு, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன், நேரில் வாழ்த்திய ஜேசன் சஞ்சய்

6
1 hr 7 mins agoshare
ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன், நேரில் வாழ்த்திய ஜேசன் சஞ்சய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved