Also Watch
Read this
ஏற்கெனவே ஹிட்டான திரைப்பட சீன்களை சுட்டு அதனை வெட்டி, ஒட்டி படமெடுப்பது போன்றுதான், தற்போது தவெகவின் ஆட்சியும் நடந்து கொண்டிருப்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்து பேசினார்.

அதற்கு, சட்டப்பேரவைக்கும் அட்லிக்கும் என்ன சம்மந்தம்? என அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்ப, அட்லியை பற்றியும் பேசுவேன், தேவைப்பட்டால் சட்னி பற்றியும் பேசுவேன் என அமைச்சரின் put chutney என்ற யூடியூப் சேனலை குறிப்பிட்டு அனல்பறக்க விவாதம் செய்துள்ளார் சிவசங்கர்.

தவெக ஆட்சியில் சட்டப்பேரவை...
தவெக ஆட்சி அமைந்த பிறகு தொடங்கிய முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தேசியகீதம் பாடப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், 2ஆவது நாள் கூட்டத்தொடரிலும் காரசார விவாதம் நடந்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமான இயக்குநர் அட்லி, ஏற்கெனவே ஹிட்டான பல திரைப்படங்களில் இருந்து சில சீன்களை வெட்டி எடுத்து அதனை ஒட்டி ஹிட் கொடுப்பார். அது போல தான், திமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் ஏதோ தவெக கொண்டு வந்தது போல சொல்வதாக விமர்சித்தார்.

சட்டமன்றத்துக்கு என்ன சம்மந்தம்?
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் திரையுலகில் இருந்து மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய் என்றும், ஆனால், முழுநேர அரசியல்வாதியான சிவசங்கர் இயக்குநர் அட்லி குறித்து பேசுவது ஆச்சரியமாக உள்ளது எனவும் கூறினார். மேலும், அட்லிக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம்? என கேள்வி எழுப்பினார்.

சட்னி பற்றியும்...
இதற்கு பதிலளித்த சிவசங்கர், தான் இயக்குனர் அட்லியை ஃபாலோ செய்வதாகவும், தங்களையும் ஃபாலோ செய்வதாகவும் கூறியதோடு, அட்லியைப் பற்றி மட்டுமல்ல, தேவைப்பட்டால் சட்னியைப் பற்றிக்கூட இந்த அவையில் பேசுவேன் எனக் கூறினார். சட்னி என சிவசங்கர் கூறியது அமைச்சர் ராஜ்மோகனின் put chutney என்ற யூடியூப் சேனலை தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படி சட்டப்பேரவையில் இயக்குநர் அட்லியை இழுத்து வைத்து அனல்பறக்க விவாதம் நடந்துள்ள நிலையில் சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்களும் நகைச்சுவை விவாதங்கள் நிகழ்த்தி வருகின்றனர்.

சமூக வலை தளங்களில்...
தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் பெயர்கள்கூட குறிப்பிட்டு பேசப்படாதபோது, அரசியலில் களம் காணாமலேயே அட்லி சட்டப்பேரவையில் இடம் பிடித்து விட்டதாகவும், முதலமைச்சரின் நெருங்கிய நண்பர்கள் அடுத்தடுத்து சட்டப்பேரவையில் இடம் பெறுவார்களோ? தவெக ஆட்சியில் இருக்கும் 5 ஆண்டுகள் இதுபோன்றுதான் விமர்சனங்கள் பலரையும் உற்று நோக்க வைக்குமோ? எனவும் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர்.

கருத்து ஒன்று தானே...
ஒரு சிலர், சிவசங்கர் இல்லாத ஒன்றை கூறவில்லையே? பல பூக்களை இணைத்து கதம்பம் கட்டுவதுபோல, பல படங்களில் இருந்து சீன்களை சுட்டு ஹிட் கொடுத்தவர் என ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் திரைப்படங்கள் வெளியானபோது ரசிகர்களே அட்லியை கலாய்த்ததுண்டு. நாம் கலாய்த்தோம், சிவசங்கர் காரசாரமாக விவாதம் செய்கிறார், ஆனால் கருத்து ஒன்றுதானே என கூறி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved