Also Watch
Read this

கனிம வளங்களை கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டுமென, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் தடையால் அரசு பணிகளுக்கு பாதிப்பு என, முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் அனுப்பினார்.
கடுமையான பாதிப்பு
கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
கடந்த 9ஆம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண் 306ன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான கருங்கல் பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது என்பதை நான் அறிவேன். இதனால், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வரப்படும் பாறைகள், கருங்கல் ஜல்லி ஆகியவற்றின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து...
கேரளாவில் பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்த தேவையான கற்களுக்கான முக்கிய ஆதாரமாக இந்த மாவட்டங்கள் நீண்டகாலமாக திகழ்ந்து வருகின்றன. பெரிய அளவிலான உள்கட்டமைப்பு பணிகளுக்குத் தேவையான தரமான கற்கள், கேரளாவில் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன என்பது உங்களுக்கும் தெரியும். எனவே, தற்போது நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்குத் தேவையான பொருட்களில் கணிசமானவை தமிழ்நாட்டின் அண்டை மாவட்டங்களில் இருந்தே பெறப்படுகிறது.
தாமதத்தால் ஏற்படும் அபாயம்
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தின் மீதான கட்டுப்பாடுகள் விநியோகச் சங்கிலியைப் பாதித்து, கட்டுமானப் பணிகளைத் தடை செய்து உள்ளதோடு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படும் அபாயத்தையும் உருவாக்கி உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை பிராந்திய இணைப்பை வலுப்படுத்தவும், சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்கவும், இரு மாநிலங்களிலும் உள்ள முக்கிய பொருளாதார மைய அணுகலை அதிகரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் கொள்கைகளுக்கு...
விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் மற்றும் வல்லார்படம் சர்வதேச கன்டெய்னர் பரிமாற்ற முனையம் ஆகியவற்றுக்கு தடையற்ற இணைப்பை வழங்குவதன் மூலம், தென்னிந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித் தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும். உங்கள் அரசின் கொள்கைக்கு பின்னால் உள்ள நோக்கங்களை நான் முழுமையாக மதிக்கிறேன். அதேநேரத்தில், தமிழக அரசின் நோக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சமச்சீரான அணுகுமுறையை உருவாக்க முடியும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.
பொருத்தமான நடைமுறை
கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவைப்படும் கருங்கல் ஜல்லி தடையின்றி கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யும் வகையில், தகுந்த தளர்வுகளை அளிப்பது அல்லது பொருத்தமான நடைமுறையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு கோருகிறேன்.
இவ்வாறு கேரள முதல்வர் சதீஷன் கூறி உள்ளார்.