Also Watch
Read this
’தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து, தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்,’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில்...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் அனைவரும், மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடகா உடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தோம்.

எச்சரிக்கைகளை மீறி...
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்ட ரீதியாகத் தான் போராட வேண்டும் என்பதே கடந்த காலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத் தான் தமிழகத்தை அவர்கள் பார்க்கின்றனர். ஆனால், தான் கர்நாடகா சென்றால் காவிரியை கையோடு எடுத்து வந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ?. நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகா செல்வதற்கு தூது அனுப்பினார்.

அவர்கள் ஒற்றுமையாக...
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடச் சொல்லி காவிரி ஆணையம் உத்தரவிட்டதும், "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்," என்று கேட்டைச் சாத்தி விட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்து தான், தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து, அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved