Also Watch
Read this
By: Web Team

உடல் ரீதியான பாதிப்பை மறைத்து, பொய் உத்தரவாதம் அளித்ததாக கூறி, மனுதாரரின் விண்ணப்பத்தை காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது. ஆனால், இது "நியாயமற்ற செயல்" என்று, நுகர்வோர் நீதிமன்றம் நியாயம் வழங்கியுள்ளது.
சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார், காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக...
சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருந்த தனது கணவர், 48 ஆண்டுகள் கட்டக்கூடிய காப்பீட்டை எடுத்திருந்தார், ஆனால், அவர் இறந்த நிலையில், முழு காப்பீட்டுத் தொகையை தரவில்லை எனக் குற்றம் சாட்டி இருந்தார்.
அதாவது, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்தவர், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். கடந்த 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தனது கணவருக்கு சில மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கல்லீரல் செயலிழப்புக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டதாக, மனுதாரர் தெரிவித்திருந்தார்.
அதே ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதியன்று, காப்பீடு எடுத்தவர் உயிரிழந்து விட்டார். கணவரை பறிகொடுத்த அந்த பெண், காப்பீட்டு தொகையை பெறுவதற்கு விண்ணப்பித்தார்... ஆனால், பேரதிர்ச்சி காத்திருந்தது...
இந்த மனுவை தனியார் காப்பீட்டு நிறுவனம், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அன்று நிராகரித்துவிட்டது.

காப்பீட்டு நிறுவனம் என்ன சொன்னது தெரியுமா?
காப்பீடு பெற்றவரின் உடல்நிலை குறித்து, காப்பீடு செய்வதற்கு முன்னரே தெரிவிக்காததால், கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என கூறிவிட்டது. கணவரை பறிகொடுத்த பெண், நுகர்வோர் நீதிமன்ற கதவுகளைத்தட்டி உள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜரான காப்பீட்டு நிறுவனம் தரப்பில், 2023ஆம் ஆண்டு, ஜனவரி 14ஆம் தேதி காப்பீடு ரத்து செய்யப்பட்டு விட்டது, பாலிசிதாரர் செலுத்திய ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 930 ரூபாய் மட்டுமே இறுதி தொகையாக வழங்கப்பட்டது என வாதிட்டது.
பாலிசிதாரர் தனது உடல்நல பிரச்னை குறித்த முக்கிய உண்மைகளை மறைத்து காப்பீட்டை பெற்றிருந்தார் என்றும் காப்பீட்டு ஒப்பந்த விதி மற்றும் நிபந்தனைகளுக்கு மாறாக காப்பீடு எடுக்கப்பட்டதாகவும் தனியார் காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது...
இரு தரப்பு வாதங்களை கேட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், காப்பீட்டு தொகையை வழங்க மறுத்தது நியாயமற்றது என்றும் காப்பீட்டு சேவையில் குறைபாட்டுக்கு வழிவகை செய்துள்ளது என்ற முடிவுக்கு வருவதாகவும் கூறியது. திருப்பி தரப்பட்ட பிரீமியத் தொகையான ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 930 ரூபாயைத் தவிர்த்து, 98 லட்சத்து 28 ஆயிரத்து 70 ரூபாயை காப்பீடுதாரரின் குடும்பத்துக்கு, 9 சதவீத வட்டியுடன், வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. மேலும், 'சேவைக்குறைபாடு, மன வேதனைக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாயையும் வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயையும் வழங்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் வழங்கியது.

ஒரு கோடி ரூபாயாக இருந்தால் என்ன, ஒரு ரூபாயாக இருந்தால் என்ன? காப்பீடு எடுக்கும் போது இவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும் என்று நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதில் முக்கியமானது, காப்பீட்டுத் தொகை பெறுவதில் சேவைக் குறைபாடு ஏற்பட்டதாக, நீதிமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே உரிய நிவாரணம் பெற முடியும் என்கிறார்கள்.
’டெர்ம் இன்ஸ்யூரன்ஸ்’ எடுக்கும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான முறையில் பதில் அளிக்க வேண்டும், உதாரணமாக, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களாக இருந்தால் அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும், இதன் காரணமாக உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் நிலையில், இதனை வெளிப்படையாக தெரிவிக்கும்போது இழப்பீட்டுத் தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதில்லை என்றும் கூறுகின்றனர்.
தனியார் நிறுவனங்களின் நியாயமற்ற வர்த்தகம் மற்றும் சேவைக்குறைபாடு ஆகியவற்றுக்குத் தீர்வு அளிக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, நுகர்வோர்களே கவனமாக இருங்க...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved