Also Watch
Read this
போர்ச்சூழலால், உலகளாவிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அனைத்து தரப்பில் இருந்தும்...
மக்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது;
மேற்காசியாவில் உள்ள சூழல் கவலை அளிக்கிறது. கடந்த 2 முதல் 3 வாரங்களில் ஏற்பட்ட சூழல் பற்றி, இந்த அவையில், மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விவரங்களை அளித்து உள்ளனர். 3 வாரங்களுக்கும் மேலாக, மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த மேற்காசிய மோதலால் உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனாலேயே இந்த மோதலுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று, உலக நாடுகளின் அனைத்து தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

உலக நாடுகளுடன் பேச்சு
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைத் தடையின்றி உறுதி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போரில் ஈடுபட்டுள்ள மற்றும் இந்த மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இந்தியா விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. மோதல் நடைபெறும் பிராந்தியம், பிற நாடுகளுடனான நமது வர்த்தகத்துக்கும், குறிப்பாக நமது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளின் பெரும்பகுதியை கொண்டு வரும் ஒரு முக்கிய வழித்தடமாக உள்ளது.

ஒரு கோடி இந்தியர்கள்
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் வசித்து, பணிபுரிந்து வருகின்றனர். வணிகக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்தியக் கப்பல் மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால், இந்தியாவுக்கு அதிகளவிலான கவலைகள் உள்ளன. எனவே, இந்த நெருக்கடி குறித்து நமது நாடாளுமன்றத்தில் இருந்து ஒருமித்த குரலும் கருத்தும் உலகைச் சென்றடைவது அவசியம்.

பாதுகாப்பாக தாயகம்...
போர் தொடங்கியதில் இருந்து, பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உதவி வழங்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை, தொலைபேசி மூலம் நடத்தி உள்ளேன். அனைவரும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளித்து உள்ளனர். இந்த மோதலின் போது, சிலர் உயிரிழந்து உள்ளனர், சிலர் காயமடைந்து உள்ளனர். மேற்காசியப் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 3.75 லட்சம் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

தொடர் கண்காணிப்பு
நாட்டின் சேமிப்புக் கிடங்குகளில் இன்னும் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய் இருப்பில் உள்ளது. விவசாயிகளுக்கு அளிக்க தேவையான அளவில் உரங்களும் கையிருப்பில் உள்ளன. சர்வதேச அளவில் ரூ.3,000க்கு விற்கப்படும் யூரியா, நமது நாட்டில் ரூ.300க்கு விற்கப்படுகிறது. மேற்காசிய நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப நாள்தோறும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசி உள்ளார்.