Also Watch
Read this
தவெக ஆட்சி கவிழ்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, ஐந்தாண்டுகள் நீடிக்கும் என திருமாவளவன் கூறி உள்ளார்.

சீருடைப்பணியாளர் தேர்வு
இதுகுறித்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
இந்த ஆண்டு நடைபெற வேண்டிய துணை ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கான தேர்வினை ஓராண்டுக்கு தள்ளி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாரானவர்கள் மிகுந்த ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த ஜூலை உடன் வயது தகுதி தேர்வு எழுதுவதற்கான வயது தகுதி பெற்றவர்கள் ஓராண்டு தள்ளி வைப்பதனால் அந்த தகுதியை இழக்க நேர்கிறது, தேர்வு எழுத முடியாமல் போகிறது. எனவே, அரசு இந்த தேர்வினை தள்ளி வைப்பதனால், வயது தகுதிக்கு ஆட்படாத அல்லது பாதிக்கப்படுகிறவர்கள் பயன்படக்கூடிய வகையில் வயது தகுதிக்கான வரையறையை தளர்வு செய்ய வேண்டும்.

சிபிஐ விசாரணை வேண்டும்
சபரிவர்மன் மரணத்தில், தொடர்பு உடையவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றாலும் கூட அதனை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும், என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகிறோம்

அவமதிப்பு விவகாரம்...
தவெக அரசு, 5 ஆண்டுகள் நீடிக்கும். இது மக்களின் கட்டளை, இந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனாலும், சமூக விரோத சக்திகள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது கவலை அளிக்கிறது. குறிப்பாக, இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்கிற சில சாதியவாத, மதவாத கும்பல் திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. இதன் மூலம் வன்முறைகளை தூண்டலாம் என சிலர் நினைக்கலாம். எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமூக விரோதிகளின் வன்முறைகளுக்கு இடம் தரக் கூடாது, காவல் துறையினரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

தவெக தலைமையில்...
நாங்கள், தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் பங்கு பெற்றுள்ளோம். கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அப்போது, அனைவருக்கும் தெரியும்.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை, முதல்வர் கூட்ட வேண்டும். டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை அந்த கூட்டத்தில் தெளிவாக விவாதிக்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும். எனவே அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய தேவை தற்போது உள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்றும்படி கர்நாடகா அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.