Also Watch
Read this
ஜூலை 17ஆம் தேதி, ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தும் நிலையில், ஹைட்ரஜன் ரயில் எப்படி செயல்படுகிறது? உலகில் எந்த நாடு முதன் முதலில் இதை நடைமுறைக்கு கொண்டு வந்தது? இதன் சாதக, பாதகங்கள் என்ன?

முதல் ஹைட்ரஜன் ரயில்...
பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 17ஆம் தேதி, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை Namo Green Rail, அரியானாவின் ஜிந்த் நகரில் தொடங்கி வைக்கிறார்.
இந்த ஹைட்ரஜன் ரயில், பாரம்பரிய எரிபொருட்களை எரிப்பதற்குப் பதிலாக வேதி வினை மூலம் மின்சாரம் தயாரித்து இயங்குகின்றன. ரயிலின் மேல் பகுதியில் உள்ள பிரத்யேக சிலிண்டர்களில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டிருக்கும்.

இந்த ஹைட்ரஜன் வாயு, காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் எரிபொருள் மின்கலத்தில் வேதி வினைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த வினையின் மூலம் மின்சாரம் மற்றும் வெப்பம் உருவாகிறது. இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ரயிலின் மின்சார மோட்டார்களை இயக்கி ரயிலை நகர்த்துகிறது. இந்த செயல்பாட்டின் போது கரும்புகையோ, கார்பனோ வெளிவருவதில்லை. துணைப் பொருளாக சுத்தமான நீராவி மற்றும் தண்ணீர் மட்டுமே வெளியேறுகிறது.

பட்டியலில் இணைந்த இந்தியா
உலகிலேயே, முதன்முதலில் ஹைட்ரஜன் பயணிகள் ரயிலை 2018ல் வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய நாடு ஜெர்மனி . இதைத் தொடர்ந்து பிரான்ஸ், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கின. தற்போது இந்த பட்டியலில் இந்தியாவும் இணைகிறது.

நம்ம ஐ.சி.எஃப். தொழிற்சாலையில்...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில், அரியானா மாநிலத்தின் ஜிந்த் முதல் சோனிபட் இடையேயான 89 கிலோ மீட்டர் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை பெரம்பூர், ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான ICFல் தயாரிக்கப்பட்டது. இதில், 2 பவர் கார்கள் மற்றும் 8 பயணிகள் பெட்டிகள் என்று, மொத்தம் 10 பெட்டிகள் உள்ளன.

இது உலகிலேயே மிக நீளமான ஹைட்ரஜன் ரயில். 89 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் சுமார் 2 மணி நேரத்தில் கடக்கும். இது 12 இடைநிலை நிலையங்களில் நின்று செல்லும். ஆரம்பத்தில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். இந்த ரயில் தினசரி 2 முறை ரவுண்ட் டிரிப் என மொத்தம் ஒரு நாளைக்கு 356 கிமீ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 2,600 பயணிகள் வரை பயணிக்க முடியும்.

பலன்கள் என்னென்ன?
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, 100 சதவீதம் பசுமையானது. கார்பன் உமிழ்வு பூஜ்ஜியம் என்பதால் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும். டீசல் ரயில்களைப் போல அதிக சத்தம் எழுப்பாது, அமைதியாக இயங்கும். 1 கிலோ ஹைட்ரஜன் எரிபொருளானது சுமார் 4.5 கிலோ டீசலுக்கு இணையான ஆற்றலைத் தரும்.

சவால்கள் என்னென்ன?
ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்வதற்கும், அதை திரவ அல்லது அதிக அழுத்த வாயுவாக மாற்றுவதற்கும் அதிக செலவாகிறது. ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால், மிக அதிக பாதுகாப்புடன் கையாளப்பட வேண்டும்.
ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகள் மற்றும் நிரப்பும் நிலையங்களை நாடு முழுவதும் அமைப்பது பெரிய சவாலாகும்.

உலகளாவிய மதிப்பு உயரும்
இந்திய ரயில்வே 2030க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நாடாக மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, இந்த ஹைட்ரஜன் ரயில்கள் முக்கியப் பங்கு வகிக்கும். டீசல் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மிச்சமாகும்.

இந்த சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் ஊட்டியில் உள்ள மலை ரயில், டார்ஜிலிங் போன்ற 35 பாரம்பரிய மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க சுற்றுலா வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்த ரயில்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்படுவதால், பசுமை ஆற்றல் துறையில் இந்தியாவின் உலகளாவிய மதிப்பு உயரும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved