Also Watch
Read this
கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவு மட்டும் அடைப்பதாக கூறிய தவெக அரசின் மற்றொரு ஏமாற்று வேலைதான் குறுவை சிறப்புத் தொகுப்பு என இபிஎஸ் சாடி உள்ளார். 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரத்தை 18 மணி நேரமாக குறைத்து விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மற்றும் ஒரு ஏமாற்று வேலை
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது;
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகளை பெரும் அதிர்ச்சி, கவலைக்கு ஆளாக்கியுள்ளது. குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.

ஏற்கெனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை கூறியபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவு கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், 134 கோடி ரூபாய்க்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மும்முனை மின்சாரம் குறைப்பு
மும்முனை மின்சாரம் ஏற்கெனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு. ஏற்கெனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டு இயக்க முடியாத நிலை வேறு உள்ளது.

கடை மடை வரை...
இந்நிலையில், விவசாயிகளின் வலி, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விவசாயிகள் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved