எம்எல்ஏ பதவிக்கு 10 கோடி ரூபாய் பேரம் பேசுவது, குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் தருவது என வண்டி வண்டியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் எழுதியும், நிர்வாகிகளின் எதிர்ப்பையும் மீறி தவெகவில் புதிய மாவட்ட செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் பரபரத்துக் கிடக்கிறது. நிர்வாகிகள் அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராகி வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.தவெகவின், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் அருள்ராஜ். இவருக்கு எதிராகத் தான் நிர்வாகிகள் வண்டி வண்டியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதாவது, திருவெறும்பூரை சேர்ந்த இவர், மாணவர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வந்த நிலையில், பதவி வருவதற்கு முன்பே தன்னை தானே மாவட்ட செயலாளர் என அறிவித்து, போஸ்டர் அச்சடித்து ஒட்டுவது, நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பது என அலப்பரை செய்து வந்துள்ளார்.இது மட்டுமா? திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட விரும்பும் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் சீட் வாங்கி தருவதற்கு 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் பகீர் கிளப்புகிறார்கள்.மேலும், குற்றப் பின்னணி கொண்ட பலருக்கும், கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், உண்மையாக உழைக்கும் நபர்களை கட்டம் கட்டி வைப்பதாகவும் குமுறுகிறார்கள் தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும். இதற்கு உதாரணமாக, கொலை வழக்கில் தொடர்புடைய பாரதிராஜா என்பவருக்கு தொகுதி பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுதி உறுப்பினர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் வழங்கியதை சுட்டிக்காட்டுகிறார்கள்.இதேபோல, தெற்கு மாவட்ட பொறுப்பாளரான கரிகாலனுக்கும், அருள்ராஜுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், அவரது ஆதரவாளர்களை கட்டம் கட்டி பதவி கிடைக்கவிடாமல் செய்து வருவதாகவும் குமுறுகிறார்கள். மேலும், கட்சியில் புதிதாக இணையும் பெண்களுக்கு, பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகிறார்கள். எனவே, அருள்ராஜுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கக் கூடாது என எதிர்ப்புக் கிளம்பியது. எனினும், கட்சித் தலைமையோ அருள்ராஜுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது.இந்த சூழலில் தான், விடுபட்ட மாவட்டங்களுக்கு கட்சித் தலைமை செயலாளர்களை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்காக கட்சி தலைமையிடம் இருந்து அருள்ராஜுக்கு அழைப்பும் வந்துள்ளது. இதையறிந்து விரக்தியடைந்த இளைஞர் அணி நிர்வாகி ஜான் டேவிட், அருள்ராஜ் மீதுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விலாவாரியாக எழுதி, தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், நோ யூஸ்... திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.இதையடுத்து, அடுத்தகட்ட போராட்டம் குறித்து எதிர் கோஷ்டிகள் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளன. இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய ஜான் டேவிட், கட்சித் தலைமை தங்களை அழைத்து பேசியிருந்தால் அனைத்து விவரங்களும் தெரியவந்திருக்கும் எனவும், கட்சிக்காக உயிரை கொடுத்து உழைத்தும் தங்களுக்கு மதிப்பில்லை என வேதனையுடன் கூறினார்.விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டுக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதில் ஜான் டேவிட்டும் ஒருவர். இந்த விபத்தில், 2 நிர்வாகிகள் உயிரிழந்த நிலையில், உடன் சென்ற டேவிட்டுக்கு 6 விலா எலும்புகள் நொறுங்கின. நீண்ட போராட்டத்துக்கு பிறகு, உயிர் பிழைத்து தற்போதுதான் வெளியில் நடமாடி வருகிறார்.