news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home bigstoriesnews திரண்டு வந்த திரை பிரபலங்கள், படைப்புகளால் வாழும் பாரதிராஜா
tv

Also Watch

tv

Read this

திரண்டு வந்த திரை பிரபலங்கள், படைப்புகளால் வாழும் பாரதிராஜா

உடைந்து அழுத முதல் மரியாதை குயிலு

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கிராமங்களின் பக்கம் தனது கேமராவை திருப்பி தமிழ் திரையுலகை வேறொரு பரிணாமத்தில் நடைபோட வைத்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவை இழந்து வாடும் திரைத்துறையினர் பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தங்கள் வருத்தங்களை வார்த்தைகளாக உதிர்த்துள்ளனர். பாரதிராஜா ஒரு புதிய வேதம், புதினம், புரட்சி நாயகன், குழந்தை மனம் கொண்டவர், கலையின் காதலன் எனக்கூறிய பிரபலங்கள் அவரது படைப்புகள் இருக்கும்வரை பாரதிராஜா வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் எனக்கூறி உள்ளனர்.

கிராமங்களை நோக்கி...
ஏவிஎம், விஜயா வாகினி போன்ற ஸ்டுடியோக்களில் செட் அமைத்து செயற்கையான வானம், மரங்கள், பூக்கள் என எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவை வயல், வாய்க்கால், ஆறு, குளம், குட்டை, ஆடு, மாடு என மண் மணம் வீசும் இயற்கை காவியமாக மாற்றியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா தான். வெள்ளை நிறம் தான் அழகு என்பதை மாற்றி கருப்பும் கண்ணுக்கு அழகு தான் என்பதை முன்னிறுத்தி பல ஹீரோக்களையும், ஹீரோயின்களையும் தனது படங்கள் மூலம் மிளிர வைத்து அழகு பார்த்தார். அப்படி, கலைத்தாயின் தலைமகனான பாரதிராஜா இயற்கை எய்தி உள்ளது திரைத்துறையினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது. அந்த கவலையையும், இழப்பையும் இயக்குநர் இமயத்திற்கு அஞ்சலி செலுத்தியபிறகு சினிமா பிரபலங்கள் கொட்டி உள்ளனர்.

நீ மாயக்காரன்...
தகவல் அறிந்தவுடன், வீடியோவில் கண்ணீருடன் பேசிய கவிஞர் வைரமுத்து, ”நீ மாயக்காரன், புழுதியை பொன் செய்தாய், இடிந்த சுவர்களும், உடைந்த மனிதர்களும், கிழிந்த வாழ்க்கையும் உன் கலையின் கச்சாப் பொருட்கள், இந்த கரட்டுப்பட்டியை டில்லி நகரத்திற்கு கொண்டு சேர்த்த அல்லி நகரத்து அரசன் நீ, இனி நான் எப்படி தனியாக தேனி போவேன் என உடைந்து பேசினார். தொடர்ந்து நேரிலும் அஞ்சலி செலுத்தினார்.

வருத்தம் தெரிவித்த ரஜினி
அதேபோல், தனது 50 ஆண்டுகால நண்பரான இயக்குநர் பாரதிராஜா பலரையும் வாழ வைத்தவர், மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடிவரக் கூடியவர் எனக்கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னை பிடிக்கும் தனது நடிப்பை பிடிக்காது என நேரிலேயே கூறியவர் எனவும் எதையுமே முகத்திற்கு நேராக பேசக்கூடியவர் எனவும் தெரிவித்தார். உயிரோடு இருக்கும்போதே இயக்குநர் இமயத்தை சந்திக்க நினைத்தேன் ஆனால் அது முடியாமல்போனதாக வருத்தம் தெரிவித்தார்.

கண்ணீர் வடித்த ராதா
தனது காட் பாதர் பாரதிராஜா தான் என்று, மாலை மாலையாய் கண்ணீர் வடித்த முதல் மரியாதை நாயகி ராதா, 15 நாட்களுக்கு முன்புகூட அவரை பார்த்ததாகவும் வேறு என்ன சொல்வது? என தெரியவில்லை எனவும் கூறி அழுதார்.

இளையராஜா, கங்கை அமரன்...
இயக்குநர் இமயமே சரிந்தபிறகு இனி பேச என்ன உள்ளது என இசையமைப்பாளர் இளையராஜா அடுத்து எதுவும் பேசாமல் நகர்ந்து போக, தங்களை வளர்த்து ஆளாக்கிய பாரதிராஜாவின் ஊதியத்தில் தான் நாங்கள் உணவே அருந்தியாக கலங்கியபடி பேசினார் கங்கை அமரன். பாரதிராஜாவை இழந்த நாம் அவரது படைப்புகளை பார்த்துதான் மனதை தேற்ற வேண்டும் வேறு என்ன சொல்ல? என்றும் விரக்தியடைந்தார்.

பாரதிராஜாவே புதிய வேதம்
அதேபோல், சினிமாவில் ஒரு சரித்திரம் நம்மைவிட்டு பிரிந்துள்ளதாக கூறிய முதலமைச்சர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், வேதம் புதிது படத்தை உருவாக்கிய பாரதிராஜாவே ஒரு புதிய வேதம்தான் என தெரிவித்தார்.

உற்சாகமாக உழைக்கும் உழைப்பாளி
தான் திரைத்துறைக்கு வருவதற்கு காரணமே பாரதிராஜா தான் எனக்கூறிய நடிகை சுகன்யா, அவரைப்போன்று உற்சாகமாக உழைக்கும் ஒரு உழைப்பாளி இனி பிறந்துதான் வர வேண்டும் என பேசினார்.

இயக்குநர்கள் மரியாதை...
வெறும் இயக்குநர் என்ற குறுகிய வார்த்தைக்குள் பாரதிராஜாவை அடக்கிவிட முடியாது எனக்கூறிய இயக்குநர் பேரரசு, அவர் புதினம், கிராமத்தானையும் சினிமாவில் நுழைய வைத்த புரட்சியின் மறு உருவம், உதவி இயக்குநர்களை மதித்து கதைகேட்க வைத்த நாயகன் எனக்கூறினார். அதேபோல், நிறைய திரைப்படங்களை பார்ப்போம், சிலநாட்களில் மறந்துவிடுவோம் ஆனால் பாரதிராஜாவின் படங்கள் காலம் கடந்தும் பேசும் என இயக்குநர் சங்கர் கூற, சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த சினிமா எளியவர்களுக்கும் கிடைக்க வித்து போட்டவர் இயக்குநர் இமயம்தான் என விக்ரமன் கூறினார்.

அழுகை எப்படி தீரும்?
என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீர குரல் இனி ஒலிக்காது, இது ஒருநாள் நடந்தே தீரும், நாமும் அழுதே தீருவோம் என்பது தெரியும்தான், ஆனாலும் அந்த அழுகை எப்படி தீரும்? எனப்பேசிய நடிகர் பார்த்திபன், ஒரு குழந்தை எப்படி தகப்பனின் சாயலில் இருக்குமோ அதுபோன்றுதான் தமிழ் சினிமாவும் பாரதிராஜாவின் சாயலில் இருந்தே தீரும் என்றார். அதோடு, தான் முன்பைவிட அழகாக இருப்பதாக கூறிய ஒருவர், தன்னை பாரதிராஜா பார்த்தால் கதாநாயகன் ஆக்கிவிடுவார் எனக் கூறியதாகவும், நம் தமிழ் சினிமாவே அவரை முன்வைத்துதான் இருக்கிறது என்றும் பார்த்திபன் கூறினார்.

கமலஹாசன், கவுண்டமணி...
அதேபோல், உலக நாயகன் கமல்ஹாசன், இயக்குநர்கள் வாசு, ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், கரு.பழனியப்பன், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கவுண்டமணி, விஜயகுமார், பாண்டியராஜ், ராமராஜன், சத்யராஜ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், அர்ஜூன், பிரபு, ஸ்ரீகாந்த், வையாபுரி, தாமு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகைகள் ராதிகா, ரேகா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் பாரதிராஜாவிற்கு அஞ்சலி செலுத்தி தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொண்டனர்.

Related Link
இயக்குநர் பாரதிராஜா பூத உடல் இன்று நல்லடக்கம்

இயக்குநர் பாரதிராஜா பூத உடல் இன்று நல்லடக்கம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக கூட்டணியில் தொடர முடியாத சூழல் - இ.கம்யூ அறிவிப்பு

4
13 mins agoshare
திமுக கூட்டணியில் தொடர முடியாத சூழல் - இ.கம்யூ அறிவிப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved