Also Watch
Read this
By: Fyrose Banu

1975ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’ திரைப்படம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்பட்டு இன்று சென்னை, ஆல்பர்ட் தியேட்டரில் 225 நாள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
அண்ணாவின் இதயக்கனி எம்ஜிஆர்
பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக 1967ல் ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவர் சுடப்பட்டு கழுத்தில் கட்டு போட்ட போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. எம்ஜிஆரின் போஸ்டரைப் பார்த்து தான் திமுகவை மக்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்கள். அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி முதல்வர் ஆவதற்கும், 1971ல் திமுக இரண்டாவது முறை ஆட்சி அமைப்பதற்கும் காரணமானவர் அண்ணாவின் இதயக்கனி, நம்முடைய புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

ஆணவச் செருக்குடன் இருந்த திமுக
ஏற்றிவிட்ட ஏனியை எட்டி உதைக்கும் வகையில் கருணாநிதி, அன்று கணக்குக் கேட்டக் காரணத்திற்காக எம்ஜிஆரை கட்சியை விட்டு வெளியேற்றினார். அதன்பிறகே எம்ஜிஆர் அண்ணா திமுகவைத் தொடங்கினார். ஆணவச் செருக்குடன் இருந்த திமுகவை வீழ்த்தி முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தவர் நம்முடைய புரட்சித் தலைவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்வரை திமுகவால் வெற்றி பெற முடியவில்லை.எம்ஜிஆரைப் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதயக்கனி திரைப்படமே சாட்சி
இதயக்கனி மட்டுமல்ல நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், மலைக்கள்ளன், மர்மயோகி, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்தாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். எம்ஜிஆர் இறந்த பிறகும், அவரது புகழ் தங்கமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இதயக்கனி திரைப்படமே சாட்சியாக இருக்கிறது

சினிமாவில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார்
சினிமாவில் அரசியலைப் புகுத்தி வெற்றி கண்ட ஒரே தலைவர் நம் எம்ஜிஆர் மட்டுமே. சினிமாவில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார். அவர் நிஜமாகவே உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்தவர். சினிமாவைப் பள்ளிக்கூடம் போன்று மாற்றியவர். தன்னுடைய ரசிகன் தன்னுடைய திரைப்படத்தைப் பார்த்து கெட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அதனால் தான். ஒரு திரைப்படத்தில் கூட புகைப்பது போன்ற, குடிப்பது போன்ற, வன்முறையைத் தூண்டுகின்ற காட்சிகள் இடம்பெறவில்லை.

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் எம்ஜிஆர்
பேரறிஞர் அண்ணா சொன்ன கருத்தையெல்லாம் சினிமாவில் எளிமையாகச் சொன்னவர் எம்ஜிஆர். அதனாலே எம்ஜிஆரை வாத்தியார் என்று அன்போடு மக்கள் அழைக்கிறார்கள். இன்று யார் யாரோ, திரைப்படத்தில் நடித்துவிட்டு எம்ஜிஆரைப் போல கனவு காண்கிறார்கள். ஒருபோதும் நனவாகாது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். இந்த மண்ணில் மறைந்தாலும் அவர் இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். இறந்த பின்னும் தன்னுடைய சொத்துக்களை காது கேளாதோர், வாய் பேசாதோர் குழந்தைகளுக்குக் கொடுத்து, அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றிய பெருமை நம் தலைவர் ஒருவரைத் தான் சாரும்.

சமூகப் புரட்சி செய்தவர் எம்ஜிஆர்
திரைப்படங்களில் என்னவெல்லாம் மக்களுக்குச் செய்வேன் என்று சொன்னாரோ அதையெல்லாம் முதல்வராகி செய்துகாட்டியவர் எம்ஜிஆர். தமிழக பொருளாதாரத்தில் ஒரு சமூகப் புரட்சி செய்தார். ஏழை எளிய பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உள்ளிட்ட அத்தனை தரப்பு மக்களையும் உயர்த்துவதற்கு 68% இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தவர் நம் தலைவர் எம்ஜிஆர். தான் உழைத்த சொத்துக்களை எல்லாம் அள்ளியள்ளிக் கொடுத்து கலியுக வள்ளலாக வாழ்ந்துகாட்டினார். அதனாலே ஒவ்வொரு குடும்பத்தினரும் இன்றுவரை எம்ஜிஆரை மனதில் சாமியாக பாவித்துப் பூஜித்துக் கொண்டிருக்கிறோம்.

எம்.ஜி.ஆரின் பக்தராக, ரசிகராக...
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் எம்.ஜி.ஆர். பக்தராக, ரசிகராக இன்றைக்கும் இருந்துகொண்டிருக்கிறார்கள். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இதயக்கனி படத்தை ரீரிலீஸ் செய்திருக்கும் உலக எம்ஜிஆர் பேரவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு இதயக்கனி படத்தை வெளியிட்டு ஒத்துழைப்புக் கொடுத்த தியேட்டர் உரிமையாளருக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் எம்ஜிஆர் வழியிலான அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved