Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலைக் காட்டில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது வெளியேறும் பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் எவ்வித தயக்கமும் இன்றி சுற்றி வருவது கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வழக்கமாகி வருகிறது.
இரவு நேரங்களில் உணவுக்காக விவசாய தோட்டங்களில் அவ்வப்போது புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.. பிரமாண்ட உருவம் நீண்ட தந்தங்கள் என காண்போரை அச்சுறுத்தும் வகையில் பாகுபலி யானை இருந்தாலும் மனிதர்கள் யாரையும் விரட்டவோ தாக்கவோ முற்படாமல் விலகி சென்று விடுவதால் உள்ளூர் மக்கள் பாகுபலி யானையை கண்டு பெரிதாக அச்சமடைவதில்லை.
இந்நிலையில் இன்று இரவு மேட்டுப்பாளையம் உதகை நெடுஞ்சாலையில் கல்லார் அருகே குடியிருப்புகளும், உணவகங்கள், தங்கும் விடுதிகள் என மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் திடீரென புகுந்த பாகுபலி யானை அங்கிருந்த கடையொன்றின் அருகே இருந்த சுருளி மரத்தை முறித்து கீழே தள்ள முயன்றது.
சில நிமிடங்களுக்கு பின் யானை தள்ளிய மரம் அருகே இருந்த கடையின் கூரை மீது விழுந்ததால் கடையின் தகர ஷெட் சேதமானது..சம்பவ இடத்தில் இருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கத்தியபடி யானையை விரட்ட முயன்றும் எவ்வித அச்சமும் இல்லாமல் சாலையில் மெதுவாக நடக்க துவங்கியது.
சுமார் இருபது நிமிடங்கள் சாலையோரம் மற்றும் சாலை நடுவே என சாவகாசமாக சுற்றித்திரிந்த பாகுபலி யானை இதன் பின்னர் பவானி ஆற்றங்கரை நோக்கி சென்றதால் அப்பகுதியில் நீடித்த பதற்றமும் பயபரப்பும் நீங்கியது.
வனத்துறையினர் ஊருக்குள் சுற்றித்திரியும் பாகுபலி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட இயலாமல் அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.