Also Watch
Read this
தஞ்சையில் உயிரை மாய்த்துக் கொண்ட அதிமுக நிர்வாகிக்கு கடைசி வரையில் கட்சி துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். இதுபோன்ற முடிவை எந்த ஒரு தொண்டனும் எடுக்க வேண்டாம் என்றும் கண்ணீருடன் கேட்டுக் கொண்டார்.

அதிமுக நிர்வாகி மரணம்
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் 27 வயதான மகேந்திரன். இவர் திருப்பனந்தாளில் பூக்கடை நடத்தி வந்தார். அதிமுகவில் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக பொறுப்பு வகித்தார். இவருக்கு மனைவி, 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், மகேந்திரன் பேஸ்புக்கில் ஒரு வீடியோவை பதிவு செய்தார்.
அதில், "அதிமுக இரண்டாக பிரிந்து இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதிமுக ஒன்றிணைய வேண்டும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும், அடுத்த பிறவியிலும் அதிமுகவின் எளிய தொண்டனாக நான் பிறக்க வேண்டும். நான் மனவேதனையில் இருப்பதால், உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனது உடலுக்கு பொதுச்செயலாளர் அஞ்சலி செலுத்தினால், எனது ஆன்மா சாந்தி அடையும்" என வீடியோ வெளியிட்டு, உயிரை மாய்த்துக் கொண்டார்.

இபிஎஸ் வருகை
கும்பகோணம் அருகே அதிமுக நிர்வாகி தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதிமுகவில் நிகழும் குளறுபடிகளால் மனவேதனையடைந்த அவர், இந்த முடிவை எடுத்த நிலையில், அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது இபிஎஸ் கூறியதாவது;
மகேந்திரனின் பெண் குழந்தை, வளர்ந்து, பள்ளிப்படிப்பை தொடங்கி, கல்வி கற்று முடிக்கும் வரை ஆகும் அனைத்து கல்விக் கட்டணத்தையும் அதிமுக ஏற்றுக் கொள்ளும். அதே போல் கட்சி சார்பில் ரூ.30 லட்சமும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சமும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.
அதிர்ச்சி, மன வேதனை
மகேந்திரன் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக இந்தப் பகுதியிலே சிறப்பான முறையிலே கட்சிப் பணியாற்றி, நிர்வாகிகளிடத்திலும், தொண்டர்களிடத்திலும், தலைமைக்கும் மிகுந்த விசுவாசமாக செயல்பட்டவர். அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இபிஎஸ் கண்ணீர்
அதிமுகவின் தொண்டர்கள் விலைமதிக்க முடியாத உயிர், இனி இப்படிப்பட்ட நிகழ்வில் யாரும் ஈடுபட வேண்டாம் என தாழ்மையுடன் தொண்டர்களுடைய பாதம் பணிந்து, வணங்கி கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த மன வேதனையில் இருக்கிறோம். மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். இன்றைக்கு அந்த குடும்பம் எப்படி கதறி அழுகின்றது என்பதை ஒவ்வொரு தொண்டனும் உணர்கின்றான், ஒவ்வொரு நிர்வாகியும் உணர்கின்றான். இந்த சூழ்நிலையில் வேறு கருத்தை என்னால் தற்போது சொல்ல இயலாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, மன வேதனையோடு, கடுமையான காயத்தோடுதான் உள்ளேன்
இவ்வாறு கண்ணீர் மல்க இபிஎஸ் பேசினார்.