Also Watch
Read this
ஊழல் வழக்கிற்கு பயந்து, அதிமுக உடன் கூட்டணி அமைத்து, உலகமகா உத்தமர் போன்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் அன்புமணியை பற்றி ஒருவார்த்தைகூட பேச தனக்கு விருப்பமில்லை எனவும், அவரை பற்றி பேசினால் தன் தகுதியே குறைந்து விடும் எனவும் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை ராமதாஸே அவரது மகன் அன்புமணியை அசிங்கம் எனக் கூறியதாக தெரிவித்தார்.

தருமபுரியில் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தருமபுரி பிரச்சாரத்திற்கு பின் சேலம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாப்பிரெட்டிபட்டி - பழனியப்பன்
பாலக்கோடு - டாக்டர் செந்தில்குமார்
அரூர் - சண்முகம்
தருமபுரி - டாக்டர் வி.இளங்கோவன்
பென்னாகரம் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோருக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்ட திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

சமூக நீதிப் போராளி என நான் பெரிதும் மதிக்கும் மருத்துவர் அய்யா ராமதாசை வேதனையில் தவிக்கவிட்டுவிட்டு, ஊழல் வழக்குக்குப் பயந்து, கூட்டணி அமைத்துவிட்டு, உலக மகா உத்தமர் போன்று உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரே?

அவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட நான் பேச விரும்பவில்லை. அவரைப் பற்றி பேசினால் என்னுடைய தகுதி குறைந்துவிடும். ஏனென்றால், மருத்துவர் அய்யாவே இவரைப் பற்றி என்ன பேசுகிறார்? அ…சி…ங்…க…ம்… என்று சொல்லியிருக்கிறார்.

வரலாற்றிலேயே மறக்கக் கூடாது
ஒன்றிய பா.ஜ.க.வின் திட்டம் என்னவாக இருக்கிறது? தெற்கு மறுபடியும் தேய வேண்டும். இதுதான் அவர்கள் பிளான். தொகுதி மறுசீரமைப்பு நடத்தப் போகிறோம் என்று சொல்லி, ஒரு போரை தொடங்கி இருக்கிறார்கள். இந்தப் போரில் நம்முடைய தமிழ்நாட்டின் குரலை நசுக்க நினைக்கும் பா.ஜ.க.வின் கொட்டத்தை அடக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தென்மாநிலங்களை இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய நினைக்கும் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாடு கொடுக்கப் போகும் பதிலடியை அவர்கள் வரலாற்றிலேயே மறக்கக் கூடாது.

எதற்காகக் கட்சி நடத்துகிறீர்கள்?
பழனிசாமி அவர்களே, உங்கள் உள்நோக்கம் இந்த ஸ்டாலினை வசைபாடுவது கிடையாது. உங்கள் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கும் ஓனர் பா.ஜ.க.வைக் காப்பாற்றுவது. அதனால்தான் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கவில்லை. F.C.R.A.-வை எதிர்க்கவில்லை, பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை. இப்போது தமிழ்நாடே கொந்தளிக்கும்போது, தொகுதி மறுசீரமைப்பால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தையும் நீங்கள் எதிர்க்கவில்லை.

இப்படி எந்தப் பிரச்சினையிலும் தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுக்காத நீங்கள், எதற்காகக் கட்சி நடத்துகிறீர்கள்? எதற்காகக் கூச்சமே இல்லாமல் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறீர்கள்? பேசாமல் பா.ஜ.க. செய்வதற்கு முன்பு, நீங்களே கட்சியை கலைத்துவிட்டு நேரடியாகப் பா.ஜ.க.வில் ஐக்கியமாகிவிடுங்கள். கூச்சப்படாதீர்கள், பா.ஜ.க.வின் பீகார் மாடல் உங்களுக்கு யூஸ்ஃபுல்லாக இருக்கும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved