Also Watch
Read this
By: Manigandan Raja

கோவில் மாசி பெருந்திருவிழா :
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து இன்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகேயுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து சந்தன கருப்பு கோவிலில் வந்து சேர்ந்தனர்.
பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர்.
தொடர்ந்து இன்று இரவு சுமார் 9 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். இதை தொடர்ந்து வரும் 27, மார்ச்
3,6 ஆகிய தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து செல்லும்.
இந்த விழா நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து மாவிளக்கு, கரும்புதொட்டில், அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள்.
வரும் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி எடுத்தல், கழுமரம் ஊன்றி பின்னர் ஏறுதல் நிகழ்ச்சியும்,தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவதும் நடைபெறும்.
மறுநாள் காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து கோவிலை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved