Also Watch
Read this
By: Manigandan Raja
நடிகை திரிஷா பற்றிய பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன், அன்றைக்கு திரிஷா பற்றிய பேச்சு, தவறி வந்த வார்த்தை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தனி நபர் விமர்சனம்...
நெல்லையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது;
என்னுடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தமட்டிலும், எந்தவொரு தனி நபர் விமர்சனத்தை நான் அனுமதிப்பதில்லை, நானும் பேசியது இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. அதற்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் என்னிடம் பேசியிருந்தார்கள். முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டிற்குச் சென்றபோது அவரும் இதுகுறித்துப் பேசினார். உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால் என்னுடைய வருத்தத்தை மனப்பூர்வமாக நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திர் கூறினார்.

விஜய் குறித்து பேசும்போது...
தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும்போது நடிகை திரிஷாவின் பெயரைக் குறிப்பிட்டு, நயினார் நாகேந்திரன் பேசினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

நடிகை திரிஷா அறிக்கை
தொடர்ந்து, நடிகை திரிஷா தனது வழக்கறிஞர் மூலமாக நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் பேசுவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, நான் அரசியலில் நடுநிலையாகவே இருக்கவே விரும்புகிறேன், எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.

சில மணி நேரத்தில்...
இதையடுத்து, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திரிஷா குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திரிஷா கண்டனம் தெரிவித்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளாகவே நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved