Also Watch
Read this

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்த நிலையில், வரும் 13ஆம் தேதி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரியில் ரங்கசாமி
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ரங்கசாமியின்
என்ஆர்.காங்கிரஸ் 12
பாஜக 4
அதிமுக, லஜக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

பெரும்பான்மையுடன் ரங்கசாமி
புதுச்சேரியில் உள்ள 30 எம்எல்ஏக்களில் ஆட்சி அமைக்க 16 பேர் ஆதரவு தேவை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதால் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. ஏற்கனவே கடந்த 3 நாட்களுக்கு முன் என்ஆர்.காங். கட்சியின் சட்டப்பேரவை கட்சித்தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே போல் பாஜகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டார்.

என்.ரங்கசாமி தேர்வு
என்டிஏ கூட்டணி அமைச்சரவையில் பாஜகவுக்கு எத்தனை அமைச்சர்கள் என்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து, புதிய ஆட்சி அமைய முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்து, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் கடிதம் அளித்துள்ளார். தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா, ரங்கசாமி, பேரவையின் பாஜக தலைவர் நமச்சிவாயம், அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன், லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் என்டிஏ கூட்டணி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

கூட்டணித் தலைவராக ரங்கசாமி தேர்வு
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ரங்கசாமி ஆட்சி அமைக்க பாஜக, அதிமுக, லஜக கட்சிகள் ஆதரவுக் கடிதங்களை வழங்கின. வரும் 13ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் முதல்வர் ரங்கசாமி பதவியேற்க முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.