Also Watch
Read this
சேலம், ஏற்காட்டில் அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்கவிட்டு, பொறுப்பின்றி இருந்த சுற்றுலா வேன் ஓட்டுநரின் கவனக்குறைவால் 3ஆம் வகுப்பு பள்ளி மாணவி வாகனத்தின் டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்தவித விதிமுறைகளையும் வாகன ஓட்டுநர்கள் பின்பற்றுவதே இல்லையென குற்றம் சாட்டும் பொதுமக்கள், அதனை கண்காணிக்க வேண்டிய காவல்துறையும் காதுகள் இல்லாததுபோன்று இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

போதிய பேருந்து வசதிகள் இல்லை
சேலம் மாவட்டம், ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை. இதனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வேன்களிலேயே பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். லேடீஸ் சீட் பகுதிவரை ஒரு வேனில் சென்று, அங்கிருந்து மற்றொரு வேனில் தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்.. அந்த வகையில், வாழவந்தி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்-ராஜாத்தி தம்பதியின் 8 வயது மகள் மேனகா தனியார் வேன் மூலம் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

எட்டு வயது சிறுமி
முண்டகம்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வந்த மேனகா உட்பட 3 மாணவிகள், ஏற்காடு லேடீஸ் சீட் முருகன் நகர் பகுதியில் வேனின் படிக்கட்டில் இருந்து இறங்கி உள்ளனர். அவர்கள் இறங்கிய இடத்திலிருந்து நகர்ந்து செல்வதற்குள் வேனை ஓட்டுநர் பின்னோக்கி இயக்க, மேனகாவின் தலை மீது சக்கரம் ஏறி இறங்கியது. மற்ற 2 மாணவிகளும் அதிர்ஷ்டவசமாக நகர்ந்து உயிர் பிழைத்தனர். இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள், வேன் ஓட்டுநரை நோக்கி ஆவேசமாக கத்தினர்.

பாட்டு சத்தம்...
ஆனால், வாகனத்தின் ஸ்பீக்கரே கிழியும் அளவுக்கு ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு சத்தத்தில் மக்களின் சத்தம் அந்த ஓட்டுநரின் காதில் விழவில்லை. அதன்பிறகு அந்த வேனையும், ஓட்டுநரையும் பொதுமக்கள் மடக்கி பிடிக்க, ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சிறுமியை இருவர் இருசக்கர வாகனத்தில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அடங்கியது அந்த பிஞ்சு உயிர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய போலீசார், கீரைக்காடு புத்தூர் கிராமத்தை சேர்ந்த வேன் ஓட்டுநர் ரங்கனை கைது செய்தனர். இதனிடையே, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடிவந்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் பள்ளி யூனிபார்மில் உயிரற்று கிடந்த மகளின் சடலத்தை கண்டு கத்திக்கதறி கண்ணீர் வடித்தனர்.

பர்மிட் இல்லை...
இந்த விபத்து குறித்து பேசிய பொதுமக்கள், பள்ளி மாணவிகளை சுற்றுலா வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கு அனுமதியே இல்லை, அதையுமீறி மாணவிகளை ஏற்றிச்செல்லும் பல வாகனங்களுக்கு முறையான பர்மிட் இல்லை, அந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு லைசென்ஸ் இல்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டியதோடு அத்தனையையும் காவல்துறையினர் கண்டுகொள்வது இல்லை எனவும் கூறினர்.

மேலும், திருவிழாவில் ஒலிப்பது போன்று வாகனங்களில் பாட்டு சத்தத்தை வைத்துக்கொள்வதாக கூறும் மக்கள், போலீசார் சாலைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு இதுபோன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆழ்ந்த இரங்கல்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved