Also Watch
Read this
By: Manigandan Raja

குடோனில் தீவிபத்து :
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே புதுநல்லூர் பகுதியில் விறகு அடுப்பில் ஏற்பட்ட தீ, அடுத்தடுத்து 2 குடிசை வீடுகளுக்கும், ஒரு குடோனுக்கும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
சோமங்கலம் அடுத்த புதுநல்லூரில் , விஜயன், பரிமளா தம்பதியினர் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பரிமளா விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்து பற்றிய தீ குடிசை வீட்டின் கூரைக்கு பரவியது. நொடிப் பொழுதில் தீ மளமளவென பற்றி எரியவே, பரிமளா, விஜயன் தம்பதியினர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
காற்றின் வேகத்தால் அந்தத் தீ அருகில் இருந்த வெங்கடேசன் - சரண்யா தம்பதியினர் வசிக்கும் மற்றொரு குடிசை வீட்டிற்கும் பரவியது. அடுத்தடுத்து 2 குடிசை வீடுகளில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள், சான்றிதழ்கள், பணம் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரையாகின.
இதே வளாகத்தில் விஜயன் வீட்டின் அருகே பழைய அட்டை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை சேகரித்து வைத்திருந்த குடோனுக்கும் தீ பரவியது. அங்கு இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த படப்பை தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் சிக்கிய இரு குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எனினும் இரு குடும்பங்களும் உடைமைகள் அனைத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விறகு அடுப்பில் இருந்து பற்றிய தீயால் விபத்து ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved