Also Watch
Read this
காதல், திருமணம் என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது பளபளக்கும் வைரம் தான். வைரம் என்றும் நிலைக்கும் என்று காதலின் ஆழத்திற்கு வைரத்தைத் தான் நாம் ஒப்பிடுவோம். ஆனால், காதலின் மேன்மையை வைரத்தை விடவும் மேலான, உலகிலேயே மிக மிக அரிதான ஒரு மாணிக்க கல்லால் சொல்ல முடியும் என்று நிரூபித்திருக்கிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆமிர் கான்.

காதல் மனைவிக்கு...
தனது காதல் மனைவி கௌரி ஸ்ப்ராட்டின் விரலை அலங்கரிக்க, வழக்கமான வைர மோதிரங்களைத் தவிர்த்துவிட்டு, ராஜ வம்சத்து கம்பீரம் தரும் ஒரு அரிய வகை மடகாஸ்கர் ரூபி மோதிரத்தைத் தேர்ந்தெடுத்து அசத்தியுள்ளார் ஆமிர்.

பாலிவுட்டின் மிஸ்டர் பெர்ஃபெக்ட் என்று அழைக்கப்படும் நடிகர் ஆமிர் கான் மற்றும் கௌரி ஸ்ப்ராட் ஜோடிக்கு, கடந்த ஜூலை 5ஆம் தேதி மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் மிக எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

மாணிக்க கல் பதித்த மோதிரம்
இந்த புதிய வாழ்க்கை தொடக்கத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், ஆமிர் கான் தனது மனைவிக்கு ஒரு பிரத்யேகமான மோதிரத்தைப் பரிசளித்துள்ளார். அது சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் மோதிரம் அல்ல, பத்து லட்சத்திற்கு ஒன்று மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு மிக அரிய வகை இயற்கை மாணிக்க கல் பதித்த மோதிரம். இந்த அரிய மோதிரத்தை உருவாக்குவதற்காக ஆமிர் கான், தான் வியூக முதலீட்டாளராக இருக்கும் க்வீன்ஸ் என்ற பிரபல ஜூவல்லரி பிராண்டை நாடியுள்ளார்.

மூன்று மாதங்கள் தேடல்
இந்த மோதிரத்திற்காக சரியான, உயர்தரமான கல்லைத் தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமே அந்த நிறுவனத்தின் குழுவினர் தொடர்ந்து மூன்று மாதங்கள் தீவிரமாகத் தேடி அலைந்து உள்ளனர். இறுதியாக ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவிலிருந்து இந்த அரிய வகை மாணிக்க கல் கண்டெடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

உச்சகட்ட தரம், தனித்துவம்
இதுகுறித்து, க்வீன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ’மடகாஸ்கரிலிருந்து பெறப்பட்ட இந்த ரூபி, இயற்கையான கற்களிலேயே மிகவும் விதிவிலக்கான வகையைச் சேர்ந்தது. உலகிலுள்ள மாணிக்க கற்களில் 0.1 சதவீதத்திற்கும் குறைவான கற்கள் மட்டுமே இந்த அளவிற்கான உச்சகட்ட தரத்தைக் கொண்டிருக்க முடியும். இந்த அரிய தருணத்தைக் குறிக்க, இந்த கல்லைத் தேர்ந்தெடுத்தது போலவே இதுவும் மிகவும் தனித்துவமானது,’ என்று பெருமையோடு தெரிவித்துள்ளது.

கண்களைக் கவரும் வேலைப்பாடு
இந்த மோதிரத்தின் வடிவமைப்பு ராஜ வம்சத்து கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளது. பெரிய, கேபோகோன் முறையில் வெட்டப்பட்ட (Cabochon-cut) இந்த இயற்கை மாணிக்க கல், கிரீடம் போன்ற தங்கப் பற்களால் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட தங்க அமைப்பிற்குள் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோதிரத்தின் வளையப் பகுதி பழங்கால முத்திரை மோதிரம் போன்ற தோற்றத்தையும், அழகான மணிகள் மற்றும் சுருள் வேலைப்பாடுகளையும் கொண்டு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.

காதலைப் போலவே...
வரலாற்று ரீதியாகவே ரூபி எனப்படும் மாணிக்க கற்கள் அரச குடும்பங்களோடும், பாரம்பரிய நகைகளோடும் நெருங்கிய தொடர்புடையவை. இருப்பினும், நவீன கால திருமணங்களில் வைர மோதிரங்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆமிர் கான் வைரங்களைத் தவிர்த்துவிட்டு இந்த பழங்கால பாரம்பரியம் மிக்க ராயல் ரூபியைத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்த ஜோடியின் காதலைப் போலவே அவர்களின் தேர்வையும் தனித்துவமாகக் காட்டியுள்ளது.