Also Watch
Read this
திமுகவும், தவெகவும் ஓரணியில் இணைய வேண்டும் என தாம் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட இடமளிக்கக் கூடாது என்பதே நோக்கம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் தேர்தல் தோல்வியும், அதிமுகவின் இன்றைய நிலை குறித்த கவலையும் தனக்கு இருப்பதாகவும் திருமாவளவன் பேசியுள்ளார்.

மண்டல செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழர் எழுச்சி நாள் மற்றும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு, வடசென்னை, மைய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளின் மண்டல செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு கட்சி நிர்வாகிகள் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

திருமாவளவன் பேச்சு
மண்டல செயற்குழு கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது;
பாஜகவை கொள்கை எதிரி என்று தவெக கூறுகிறது. திமுகவும் பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வருவதாக கூறுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் பாஜகவை எதிர்ப்பதைத் தான் அரசியலாகக் கொண்டுள்ளன. இப்படியிருக்கும் போது பாஜகவை எதிர்க்கும் தவெக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் வரக்கூடாதா? இதைத்தான் நான் கேட்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

கேரளா, மேற்கு வங்கத்தில்...
கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் கடுமையாக அரசியல் ரீதியாக மோதிக் கொள்கின்றன. இருந்தாலும் இந்தியா கூட்டணியில் இரு கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இந்தியா கூட்டணியில் இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். அதுபோல தமிழ்நாட்டில் அரசியல் நடைபெறக் கூடாதா? இதை திருமாவளவன் சொன்னால் உங்களால் புரிந்துகொள்ள முடியாதா?"

தளபதிகளை அனுப்பி வைக்கிறேன்
உங்கள் கட்சியில் இருந்து ஆட்களை அழைத்துச் செல்கிறார்களே என்று கேட்கிறார்கள். இப்போதுகூட நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு பேர் வேண்டும் என்று சொல்லுங்கள், நானே அனுப்பி வைக்கிறேன். எங்கள் பாசறையில் உங்களுக்கு தேவையான அளவுக்கு படைத் தளபதிகள் உருவாகி இருக்கிறார்கள் என்றால் அது எனக்கு மகிழ்ச்சி தான். இவர்கள்தான் உங்களை மீட்டெடுக்க முடியும் என்று நீங்கள் உண்மையாக நம்பினால், எவ்வளவு பேர் வேண்டும் என்று சொல்லுங்கள், தளபதிகளை அனுப்பி வைக்க நான் தயாராக இருக்கிறேன்.

அமித்ஷா பேச்சு
டெல்லியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அது கட்சி பாகுபாடின்றி கூறியதாகும்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.