Also Watch
Read this
கரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலை மனதில் கொண்டே முதலமைச்சர் விஜய் பேசி இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் எதையாவது நிறைவேற்றியது உண்டா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இன்னும் சினிமா ஷூட்டிங் போலவே நடந்து கொள்ளும் முதலமைச்சர் விஜயை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவதா? என கண்டனம் தெரிவித்துள்ள ஜெயக்குமார், கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு தனது சொந்த பணத்தில் இருந்து தலா 1 கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கலாமே? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஊழல்வாதிகளை வைத்துக் கொண்டு...
நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் சிரித்த முகத்துடன் பங்கேற்றார். அப்போது, ஜெயக்குமார் கூறியதாவது;
முதலமைச்சர் என்பதை மறந்து அருவருக்கத்தக்க வகையில் விஜய் பேசியுள்ளார். கரூரில் முதலமைச்சர் விஜயின் பேச்சு வழக்கமான ஸ்கிரிப்ட் தான், புது மாதிரியாக ஒன்றும் இல்லை. அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று பேசுகிறார் விஜய்.

ரூ.1 கோடி தரலாமே...
இன்னும் சினிமா சூட்டிங் போலவே முதலமைச்சர் நடந்து கொள்கிறார். இடைத் தேர்தலை மனதில் கொண்டு முதலமைச்சர் பேசி இருக்கிறார். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், கோழி திருடனை பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஊரெல்லாம் தண்டோரா போட்டானாம். அந்த மாதிரி தான் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்.

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு விஜய் தனது சொந்த பணத்தில் தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கலாமே? கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல விஜய்யின் செயல் இருக்கிறது.
இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.