Also Watch
Read this
1987ஆம் ஆண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரை இழந்தோரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி, பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

கரூரில் அரசுப்பணி, வரவேற்பு
இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி கூறி இருப்பதாவது;
கரூர் தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளையும், பணியாற்ற முடியாதவருக்கு 10 லட்சம் ரூபாயையும் முதலமைச்சர் விஜய் வழங்கி உள்ளார். கருணை அடிப்படையிலான இந்த உதவி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இத்தகைய உதவிகள் ஒரு சாராருக்கு மட்டுமின்றி, பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

அரசுப்பணி சரியானதா?
தமிழக அரசின் நடவடிக்கை சரியானதா? என்பது தொடர்பாக அரசியல், சட்ட ரீதியாக விவாதம் நடந்து வருகிறது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன என்பது உண்மை. அதைக் கருத்தில் கொண்டும், கருணையை மட்டும் அளவீடாகக் கொண்டும் பார்க்கும் போது, இந்த நடவடிக்கை மிகவும் தேவையானது என்பது தான் பாமகவின் நிலைப்பாடு.

இன்று வரை செய்யவில்லை
கடந்த காலங்களில் நிகழ்ந்த இதே போன்ற, இதை விட இன்னும் மோசமான நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இத்தகைய உதவி வழங்கப்பட வேண்டும் என்று, பாமக வலியுறுத்துகிறது. 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டும், பிற தாக்குதல்களிலும் உயிரிழந்த 25 பேரும் சமூக நீதிக்காக போராடியவர்கள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உன்னத கோரிக்கையை வலியுறுத்தி போராடியவர்கள். அரசையோ, காவல்துறையையோ சீண்டும் வகையிலான எந்த செயல்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனாலும், அறவழியில் போராடிய அப்பாவிகளை காவல்துறையினர் காக்கை, குருவிகளை சுடுவது போல சுட்டு வீழ்த்தினார்கள்.

வாழ வைக்க வேண்டும்
வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரை இழந்தோர் குடும்பங்கள் இன்றளவும் வாழ்வாதாரமின்றி வாடும் நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டால், அந்த குடும்பங்கள் முன்னேறி விடும். அவர்கள் செய்த தியாகத்தால் 115 சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பம் பயனடைந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்கள் இன்னும் அடிமட்டத்தில் உள்ளன.

பிறரை வாழ வைத்தவர்களை தமிழக அரசு வாழ வைக்க வேண்டும். எனவே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டதைப் போல, இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உடனடியாக அரசுப்பணி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறி உள்ளார்.