Also Watch
Read this
தமிழக அரசியல் களத்தில், இப்போது டாப் கியரில் எகிறிக் கொண்டிருப்பது தவெக நிர்வாகிகளின் ரீல்ஸ் அலப்பறைகள் தான். மக்கள் பணியை விட சோஷியல் மீடியா லைக்குகளுக்காக அரசு மருத்துவமனைகளையே தங்களின் சொந்த கட்சி ஆபிஸ் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு தவெகவினர் செய்த அத்துமீறல்கள், ஆளுங்கட்சியின் இமேஜுக்கே பெரிய ஸ்கெட்ச் போட்டுள்ளது. காது வலிக்கும் பிஜிஎம், சினிமா பாணி ஆய்வுகள், பிஞ்சு குழந்தைகளிடம் காட்டிய வம்படித்தனம் என தமிழகத்தை அதிரவைத்த போலியோ முகாம்களில் நடந்த சர்ச்சைகளை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இதுதான் ஹாட் டாபிக்...
போலியோ சொட்டு மருந்து முகாம்களில், தவெக நிர்வாகிகள் செய்த அலப்பறைகளும், அதற்கு தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கைகளும் தான் தற்போதைய ஹாட் டாபிக்.
மக்களுக்கான ஆட்சி, நேர்மையான நிர்வாகம் தருவோம் என்று தவெக அரசு அரியணை ஏறியபோது வாக்குறுதி கொடுத்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, பவர் தலைக்கேறிய அடிமட்ட நிர்வாகிகளின் ரீல்ஸ் மற்றும் பப்ளிசிட்டி அரசியல், பொது மக்களிடையே விமர்சனங்களை உருவாகி தலைமைக்கு பெரும் குடைச்சலைதான் கொடுத்து வருகிறது.

போலியோ சொட்டு மருந்து முகாமில்...
தமிழகம் முழுவதும் கடந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. சென்னை ஈசிஆர் சாலை பாலவாக்கத்தில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு அதிகாரிகள், செவிலியர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே இதில் பங்கேற்க வேண்டும் என்பது விதிமுறை.

சோழிங்கநல்லூரில்...
ஆனால், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி 184ஆவது வார்டில் அரங்கேறிய கூத்து வேற ரகம். மக்கள் பிரதிநிதியே அல்லாத தவெகவின் வட்டச் செயலாளர் ஓஎம்ஆர் ஹரி என்கிற டில்லிபாபு, தனது ஆதரவாளர்களுடன் சென்னை மாநகராட்சி அரசு மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்துள்ளார். அங்கிருந்த அரசு பதிவேடுகளை ஏதோ தலைமை ஆசிரியர் போல ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து விடுவது போலவும் வீடியோ எடுத்துள்ளார். பி.ஜி.எம். உடன் எடிட் செய்யப்பட்ட இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, அரசு மருத்துவமனையை தவெக கட்சி அலுவலகம் என நினைத்து விட்டார்களா? என பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர்.

மருத்துவ பயிற்சி இன்றி...
அதனைத் தொடர்ந்து, துரைப்பாக்கம் அங்கன்வாடி மையத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த தவெக வட்டச் செயலாளர் ஓ.எம்.ஆர். பன்னீர், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களிடம், நான் ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்று பந்தா காட்டியுள்ளார். மேலும், எவ்வித மருத்துவப் பயிற்சியும் இல்லாமல் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து கொடுத்து, அதை கெத்தாக ரீல்ஸ் வீடியோவாகவும் தட்டிவிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர், அரசு சார்ந்த இடங்களில் ஆய்வு செய்யக்கூடாது என்று தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் ஏற்கெனவே கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருந்தார். அதை அக்கட்சியின் வட்டச் செயலாளரே காற்றில் பறக்க விட்டதுதான் சோகம்.

தென்காசி சுரண்டையில்...
இதேபோன்ற ஒரு சம்பவம், தென்காசி மாவட்டம் சுரண்டையிலும் அரங்கேறியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாமில், எவ்வித மருத்துவப் பயிற்சியோ அல்லது அரசு பதவியோ இல்லாத தவெக நகரச் செயலாளர் கணேசன் மற்றும் மகளிர் அணிச் செயலாளர் சரஸ்வதி ஆகியோர் புகுந்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்துள்ளனர். இதனை படம் பிடித்து இணையத்தில் வைரலாக்க, குழந்தைகளின் உயிரோடு விளையாடும் இந்த விளம்பர மோகத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகள் எப்படி அனுமதி அளித்தார்கள்? முதலமைச்சர் விஜய் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராமநாதபுரத்தில்...
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தவெக நிர்வாகிகள் தங்களின் கட்சித் துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு, அரசு மருத்துவமனைக்கு உள்ளேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கியுள்ளனர். மருத்துவ முகாம்களை கட்சிப் பரப்புரை மேடையாக மாற்றிய இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகரிலும்...
இந்த சர்ச்சைகளின் உச்சகட்டம் விருதுநகரில் தான் நிகழ்ந்தது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 137 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இதனை தொடங்கி வைத்தார். ஆனால், தவெக மத்திய ஒன்றிய செயலாளரான முத்துவேல், எவ்வித அனுமதியும் இன்றி ஒரு மையத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த அரசு பணியாளர்களை ஏதோ குற்றவாளியை விசாரிப்பது போல் விசாரித்து வீடியோ எடுத்துள்ளார். அப்போது, அந்த மையத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால், சிறிது நேரம் காத்திருந்து ஒரு பெண்ணின் மூலமாக ஒரு குழந்தையை அங்கே வரவழைத்துள்ளார்.

சமூக வலை தளங்களில்...
மருத்துவ பயிற்சி ஏதுமில்லாத முத்துவேல், அழுதுகொண்டே இருந்த அந்த பிஞ்சு குழந்தைக்கு வம்படியாக போலியோ சொட்டு மருந்தை ஊற்றியுள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்தையும் ஒரு சினிமா பாணியில் ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்து, பாடலுடன் எடிட் செய்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தலைமை உடனே களத்தில் இறங்கியது.

கட்சி நடவடிக்கை
கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதாக, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, மத்திய ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து முத்துவேல் 3 மாத காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை மற்ற நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

நீண்டு கொண்டே செல்லும்...
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே, அக்கட்சியின் சில நிர்வாகிகள் சட்ட விதிகளை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. சில இடங்களில் முறையான அனுமதியின்றி வெள்ளை அங்கி அணிந்து கொண்டு, தாங்களே மருத்துவ குழு என்று கூறிக்கொண்டு மருத்துவமனைகளில் ஆய்வு செய்வது, அரசு அலுவலகங்களில் எம்.எல்.ஏ நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு ரீல்ஸ் போடுவது, சிறுவர்களிடம் விஜய் படத்தை கொடுத்து முதலமைச்சர் விஜய் மாமா வாழ்க என முழக்கமிட சொல்வது
என இவர்களின் அலப்பறைகள் நீண்டு கொண்டே போகின்றன.

பொது மக்களின் எதிர்பார்ப்பு
புதிய மாற்றத்தை நோக்கி தமிழகத்தை வழிநடத்த நினைக்கும் முதலமைச்சர் விஜய், இதுபோன்ற ரீல்ஸ், பப்ளிசிட்டி மோகத்தில் அலையும் நிர்வாகிகளுக்கு இன்னும் கடுமையான கடிவாளம் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.