Also Watch
Read this
By: Manigandan Raja

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெள்ளையம்பதி பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (வயது 34). இவர் வெள்ளையம்பதி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இன்று காலை ஆசிரியை மேகலா வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
வெள்ளையம்பதி கிராமத்தின் அருகே ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென மேகலாவின் வாகனத்தை நெருங்கினர்.
கண் இமைக்கும் நேரத்தில், மேகலாவின் கழுத்தில் இருந்த 10 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை அந்த மர்ம நபர்கள் பலவந்தமாகப் பறித்தனர். இதனால் நிலைதடுமாறிய ஆசிரியை மேகலா, வாகனத்துடன் கீழே விழுந்து கத்திக் கூச்சலிட்டார்.

அவரது சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதற்குள், அந்த கொள்ளையர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகத் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை மேகலா உடனடியாக சாம்பல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாம்பல்பட்டி போலீசார், அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் போலீஸ் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.