Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைய இருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார். நாளை காலை 9 மணி முதல் மாமல்லபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் இணைப்பு விழா நடைபெறும் என்றும் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அறிக்கை வெளியிட்ட விஜயபாஸ்கர்
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொது நலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கொரோனா’ பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.

புதிய உத்வேகத்துடன்...
நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாபெரும் இணைப்பு விழா
இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வருகிற வியாழக்கிழமை ஜூலை 2ஆம் தேதி, காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் ஃபோர் பாயின்ட் ஷெரட்டான் ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.
இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved