Also Watch
Read this
தமிழக முதலமைச்சரை கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட வைப்பததற்காக சகல ஏற்பாட்டோடு அம்மாநில முதலமைச்சர் தயாராக இருக்கும் நிலையில், அதே ஹெலிகாப்டரில் கர்நாடக முதலமைச்சரையும் தமிழக முதலமைச்சர் அழைத்து கொண்டு வருவாரா? என அரசியல் கட்சி தலைவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளனர். இது ஒருபுறமிருக்க, முதலமைச்சர் கர்நாடகா செல்ல உள்ளதாக பரவிவரும் உறுதி செய்யப்படாத தகவல் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது என அமைச்சர் ராஜ்மோகன் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரம்
தமிழ்நாடு - கர்நாடகாவிற்கு இடையே மூண்டு கொண்டிருக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை இன்று, நேற்று நடப்பதல்ல. பல ஆண்டுகாலமாகவே தீரா பிரச்சனையாக உள்ளது. தவெக அரசு பொறுப்பேற்றவுடன் காவிரி நதிநீர் மற்றும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் தலைமையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், காவிரி நீர் ஒழுங்காற்று குழு மூலம் சட்ட நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, பாழாய்போன பருவமழை ஒருபக்கம் தமிழகத்தை பதங்குலைக்க ஜூன் முதல் ஜூலை வரை திறந்துவிட வேண்டிய 40.43 டிஎம்சி காவிரி நீரையும் கர்நாடகா கண்ணில் காட்டவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாயம் தள்ளாடி கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி நீர் திறந்துவிடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டும், கிஞ்சித்தும் கர்நாடக அரசு அசைந்து கொடுக்கவில்லை.

பாமக தலைவர் அன்புமணி கேள்வி
தண்ணீர் பிரச்சினை தமிழ்நாட்டு விவசாயிகளின் கண்ணீர் பிரச்சினையாக மாறி உள்ள நிலையில்தான், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகாவிற்கு செல்ல உள்ளார் முதலமைச்சர் விஜய். இதற்கு, அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேகதாது அணை கட்டுவதை நாம் ஏற்றுக்கொள்ளவே இல்லை, அப்படி ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றுக்காக ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? அதில் என்ன அர்த்தம் உள்ளது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராகுல்காந்திக்கு சவால்
முதலமைச்சரை தவறாக யார் வழி நடத்துகிறார் என தெரியவில்லை எனவும் மத்திய பாஜக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் சேர்ந்து கூட்டு சதி செய்து வருவதாகவும் அன்புமணி ராமதாஸ், குற்றம் சாட்டினார். மேலும், மேகதாது அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தியிடம் சொல்ல மாணிக்கம் தாகூருக்கு தைரியம் உள்ளதா? கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தி சொன்னால் தான் என்டிஏ கூட்டணியில் இருந்தே விலகிக் கொள்வதாகவும் சவால்விட்டார்.

கர்நாடக முதல்வர் வருவாரா?
இதேபோல், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியனும் தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கர்நாடகாவிடம் தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கும் நடவடிக்கை என அவர் கொந்தளித்தார். மேலும், கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை பார்வையிட பவுசாக ஹெலிகாப்டரோடு காத்திருக்கும் அம்மாநில முதலமைச்சர் டிகே சிவக்குமாரை போன்று தமிழ்நாடு முதலமைச்சரும் திரும்பும்போது கூடவே கர்நாடக முதலமைச்சரை அழைத்துக் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை
இதே கருத்தை தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மு.வீரபாண்டியனுமே கூறி உள்ளார். ’கர்நாடக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று, எப்போதுமே நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை,’ எனவும் குற்றம்சாட்டினார்.

நான் சொல்ல முடியாது - ராஜ்மோகன்
இப்படி, முதலமைச்சரின் கர்நாடக பயணத்திற்கு ஒருபுறம் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் மறுபக்கம் முதலமைச்சர் எங்கு செல்கிறார், எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பதையெல்லாம் அவரும், அவரது அலுவலகமும்தான் அறிவிக்கும் எனவும் வேறு யார் சொல்வதும் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடையாது, உறுதி செய்யப்படாத தகவல்கள் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது எனவும் சஸ்பென்ஸ் வைத்தார் அமைச்சர் ராஜ்மோகன். அதேநேரம், 2 மாநிலங்களுக்கு இடையிலான சென்சிட்டிவான பிரச்சினையில் நான் பேசுவது சரியல்ல எனவும் கூறினார்.
அப்படியானால் முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லவில்லையா? தற்போது பரவி வருவது உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லையா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved