Also Watch
Read this
டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் விவகாரத்தில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில், செந்தில் பாலாஜின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவை தொடர்ந்து, செந்தில் பாலாஜி கைதாகிறார? அடுத்து என்ன செய்ய போகிறது லஞ்ச ஒழிப்புத்துறை? என்ற பரபரப்பு அரசியல் களத்தில் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் என்ன?

நாலாபுறமும்...
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சுற்றி நாலாபுறமும் சட்ட ரீதியான செக் மேட் வைக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார் டெண்டர் முறைகேடு, தவெக எம்எல்ஏ பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் குதிரைபேர வழக்கு என அத்தனை பக்கங்களிலிருந்தும் புயல் சுழன்றடிக்க தொடங்கியிருக்கிறது.
டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் ஒதுக்கீட்டில் பல நூறு கோடி ரூபாய் கையாடல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தூக்கிய வழக்கில், முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி போட்ட மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது . வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியதோடு, எதன் அடிப்படையில் முன்ஜாமின் கேட்கிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளால் செந்தில் பாலாஜி தரப்பை திணறடித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை வாதம்...
நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை வைத்த வாதங்கள் தான் வழக்கின் போக்கையே தலைகீழாக மாற்றியிருக்கின்றன. ’இந்த விவகாரத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இப்போது வெளிவந்திருப்பது வெறும் பனிப்பாறையின் நுனி மட்டுமே. இதில் மறைந்திருக்கும் மொத்த பின்னணியையும் தோண்டியெடுக்க, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது மிகவும் அவசியம்,’ என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் முழங்கியது. மறுபக்கம் கூறப்படும் முறைகேட்டுக்கும் டாஸ்மாக் நிறுவனத்துக்கும் அல்லது செந்தில் பாலாஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அமலாக்கத்துறை விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம் என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டும் பலனில்லாமல் போனது.

உச்சநீதிமன்றத்தில்...
உயர்நீதிமன்றத்தில் செக் வைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே, பிற்பகலில் செந்தில் பாலாஜி தரப்பு டெல்லி உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டியிருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு வழக்கின் தீவிரத்தை எடுத்துரைத்து அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக் கிழமை விசாரிப்போம் என தலைமை நீதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார். ஒருவேளை உச்சநீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடியானால், லஞ்ச ஒழிப்புத்துறையால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன.

சொத்து குவிப்பு வழக்கில்...
வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக கைதில் இறங்காது என்றாலும், 1996ல் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும், 2001ல் மேம்பால வழக்கில் கலைஞரையும் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது இதே லஞ்ச ஒழிப்புத் துறைதான். அதே பாணியில், தேவைப்பட்டால் செந்தில் பாலாஜியையும் கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை காய்நகர்த்தி வருவதாக கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

முன்ஜாமின் ரத்தாகுமா?
இதுபோதாதென்று, தவெக எம்எல்ஏ பேரம் பேசியதாக பாயப்பட்ட குதிரைப்பேர வழக்கிலும் தினசரி கையெழுத்துப் போடாததால், அவருடைய முன்ஜாமினை ரத்து செய்ய சென்னை காவல்துறையும் தீவிரமாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் அரங்கேற போகும் அந்த உச்சகட்ட கிளைமேக்ஸ் என்ன? லஞ்ச ஒழிப்புத் துறையின் கைவிலங்கு பூட்டு செந்தில் பாலாஜியை நோக்கி பாயுமா? அல்லது சட்டப் போராட்டங்களின் மூலம் தனக்கான தற்காப்பு அரணை அமைத்து அவர் மீண்டும் தப்பிப்பாரா? அரசியல் களத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த மெகா சஸ்பென்ஸுக்கு பதில் என்ன? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.