Also Watch
Read this
கர்நாடகாவில், இன்சூரன்ஸ் பணத்திற்காக முன்னாள் ராணுவ வீரரை மனைவியே தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் அதற்கு தடயவியல் ஆய்வக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த 3 மாதங்களுக்கு பிறகு கொலை நடந்தது தெரியவந்தது எப்படி?

இரண்டு கோடி ரூபாய்க்காக...
2 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காகவும், கள்ளக் காதலனுடன் ஜாலியாக வாழ்வதற்காகவும் கட்டிய கணவனை க்ரைம் மற்றும் த்ரில்லர் வெப் சீரிஸை மிஞ்சும் அளவிற்கு கொலை செய்து நாடகமாடி உள்ளார் மனைவி. இந்த கொலை வழக்கில் பெரும் அதிர்ச்சியே தடயவியல் ஆய்வக ஊழியர்கள் முதல் சுகாதார மையத்தில் பணிபுரிபவர்கள் வரை உடந்தையாக இருந்தது தான்.

இன்சூரன்ஸ் பணத்தைப் பெற...
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி அருகே உள்ள கொடகேரி பகுதியை சேர்ந்தவர் சந்தீப் கலகவுடா மாஞ்சேரி. 46 வயதான இவர் ராணுவத்தில் ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கடந்த மார்ச் 14ஆம் தேதி அவரது 40 வயதான மனைவி சுமா அழுது கண்ணீர் சிந்தினார். அதன்பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தீப் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடலை பெற்றுக்கொண்ட மனைவி உறவினர்களுடன் சேர்ந்து சடலத்தை அடக்கம் செய்தார். அடுத்த சில நாட்களில், கணவர் பெயரில் இருந்த 2 கோடி ரூபாய்க்கான காப்பீட்டு பணத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அதில், சுமாவுக்கு இருந்த அவசரமும், ஆர்வமும் சந்தீப்பின் பெற்றோருக்கு சந்தேகத்தை வரவழைத்தது.

விசாரணையில் அதிர்ச்சி
இதனால், தனது மருமகள் மீது சந்தேகம் இருப்பதாகவும், தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் யம்கன்மரடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தீப்பின் சடலத்தை தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர். அதில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்பிறகு சுமாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் தான், பல அதிர்ச்சி தகவல்களே அம்பலமானது.

80க்கும் மேற்பட்டோர் உடந்தை
சந்தீப்பின் நண்பரான பன்டலீகா டொம்பரா, அதே பகுதியில் துரித உணவு கடை நடத்தி வந்துள்ளார். அவருக்கும், சுமாவுக்கும் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் இடையூறு இல்லாமலும், நினைத்தபடி செலவு செய்து வாழ நினைத்த மனைவி, கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். அந்த திட்டத்திற்கு கள்ளக்காதலனும் உடனே தலையாட்டி உள்ளார். கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்த சுமா, திடீரென மயங்கிவிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

பார்மசி படித்துக்கொண்டே மருத்துவமனையில் பணியாற்றி வரும் சுமாவின் உறவினர் ராகுல் மூலம் சந்தீப் உடலில் குளுக்கோஸ் மூலம் விஷத்தை ஏற்றி கொலை செய்துள்ளனர். இதற்கு, சுகாதார மையத்தில் பணியாற்றும் சுமாவின் தாய், டாக்டர் பசவராஜ், தடயவியல் ஆய்வக ஊழியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

அனைவருக்கு பணம்...
இன்சூரன்ஸ் பணத்தில் குறிப்பிட்ட தொகையை தருவதாகக் கூறி, ஆசையை காட்டி தடயவியல் ஆய்வக ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தங்கள் வழிக்கு சுமாவும் அவரது கள்ளக்காதலனும் கொண்டு வந்துள்ளனர். ஒருவழியாக திட்டத்தை சரியாக முடித்து கணவன் சடலத்தை அடக்கம் செய்த சுமா, இன்சூரன்ஸ் பணத்திற்காக பட்ட அவசரம் ஒட்டுமொத்த உண்மையையும் வெளியில் கொண்டு வர வழிவகை செய்துவிட்டது.

சுமா, கள்ளக்காதலன் என முக்கிய குற்றவாளிகள் 9 பேரை கைது செய்த காவல்துறை மற்ற நபர்களை விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர். சினிமா பாணியில் நடந்த இந்த கொலைச் சம்பவம் கர்நாடகாவை அதிர வைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved