Also Watch
Read this
By: Manigandan Raja

தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) தகவல் :
2025-ம் நிதியாண்டில் குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட 15 மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த 15 மாநிலங்களின் மொத்த வருவாய் பற்றாக்குறை 3 லட்சத்து 46 ஆயிரத்து 385 கோடி எனவும் தெரிவித்துள்ளது.
சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள் :
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சஹாகர்நகர் பகுதியில் தெருவில் நடந்து சென்ற சிறுமியை தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. CQAL லே அவுட் பகுதியில் சிறுமி நடந்து சென்ற போது அவரை சூழ்ந்த தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுமியை அங்கும் இங்கும் இழுத்து கடித்து குதறின.
வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியதால் சரமாரி தாக்குதல் :
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் மதுபோதை கும்பல்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில், தகராறு செய்தவர்களை பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்த சம்பவம் நடந்துள்ளது. பரமத்தோடு என்ற பகுதியில் இரண்டு போதை கும்பல்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அவர்களை தடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதிவேகமாக டீ கடைக்குள் புகுந்த கார்: 3 பேர் பரிதாப பலி :

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அதிவேகமாக சென்ற கார், டூவீலர்கள் மற்றும் ஆட்டோ மீது மோதி சாலையோர டீக்கடைக்குள் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். கஜபதி நகரில் ஆச்சார்யா விஹாரையும், நல்கோ ஸ்கொயர் பகுதியையும் இணைக்கும் சாலையில் உள்ள டீக்கடையில் 6 பேர் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
சிங்கம் தாக்கியதில் உத்தரகாண்ட் இளைஞர் பலி :

குஜராத்தில் சிங்கம் தாக்கியதில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். ராஜுலா வன பகுதிக்குட்பட்ட அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்த அவர், இரவு தாமதமாக வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, திடீரென்று புதரில் இருந்து வெளியே வந்த சிங்கம், அந்த இளைஞர் மீது பாய்ந்து தாக்கி, கடித்து குதறி கொன்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved