Also Watch
Read this
புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்து உள்ள அண்ணாமலை, இயக்கத்தை கட்சியாக கட்டமைத்த பின்னர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி உள்ளார்.
இது தமிழர் பண்பு
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது;
2020, ஆகஸ்ட் 25ஆம் தேதி, பாஜகவில் இணைந்தேன். தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். என்னுடைய பாதை வேறு, வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டும். எனக்கு இலக்குகள் பெரியதாக உள்ளன. நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும். ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளேன். இதனை பாஜக தலைவர்களிடம் பண்போடு கூறிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்து உள்ளேன். இது, தமிழர் பண்பு என்றும் கூட வைத்துக் கொள்ளலாம்.

அரசியலுக்கு வருவதே அரிது
ஒரு புதிய இயக்கம், ஒரு புதிய அரசியல் இயக்கம், ஒரு புதிய பரிமாணத்தோடு இயங்கக்கூடிய வகையில் தான் நமது இயக்கத்தை தொடங்க வேண்டும். எல்லோரும் இணைந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசை. எனது அரசியல் பாதை எளிதானது அல்ல. வளைந்து, நெளிந்து நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். இதுபோன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது. ஏனெனில், நாம் ஒதுங்கிக் கொள்வோம், வர மாட்டோம்.
தேமுதிகவில் பயிற்சி
என்னுடைய பாதையும் கூட 2009ஆம் ஆண்டு, விஜயகாந்த்தின் தேமுதிகவில் மூன்று மாத காலம் இருந்து பயிற்சி பெற்று, பின்னர் 10 ஆண்டு காலம் கழித்து பாஜகவில் இணைந்து, இங்கு 6 ஆண்டு காலம் பணியாற்றிய நிலையில், தற்போது தனித்துவமான முறையில் நம்முடைய இயக்கத்தை மக்கள் முன் வைக்க வேண்டும் என்பதற்காக நான் உங்கள் முன் நிற்கிறேன்.

ரஜினி உடன் நட்பு
காவல்துறை பதவியை விட்டு விலகிய பிறகு, எனக்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நான் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் தொலைபேசியில் பேசினார். நான் அவரது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அப்போது, தமிழ்நாட்டுக்கு எது நல்லது, ரஜினிகாந்த்துக்கு எது நல்லது, அண்ணாமலைக்கு எது நல்லது என்ற மூன்று விஷயங்கள் தான் என் கண் முன்பாக இருந்தன. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காலமாக இருந்ததால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு நல்லது. நான் பாஜகவில் இணைவதாக பி.எல்.சந்தோஷிடம் வாக்குறுதி அளித்து இருந்தேன். அதனால் அதை மீறக்கூடாது என்று, நான் விரும்பினேன்.
வேறு காரணம் இல்லை
இதனால், என்னை மன்னித்துவிடுங்கள், என்னால் வர முடியாது என்று ரஜினிகாந்த்திடம் கூறிவிட்டு, மறுநாள் பாஜகவில் இணைந்தேன். பிறகு நேரிலும் சந்தித்து மன்னிப்பு கோரினேன். அவரும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு தனது முடிவை அவர் எடுத்தார். சில யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். வேறு காரணம் இல்லை.

தனிப்பட்ட பிரச்சினை அல்ல
பாஜகவில் இருந்தபோது பல தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அப்போது முடிவெடுத்தோம். அதேபோல், மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்து அவ்வாறே போட்டியிட்டோம். எனக்கும் இன்னொரு கட்சிக்குமான தனிப்பட்ட பிரச்சினை அல்ல அது. பாஜக தமிழர் அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

’வீ த லீடர்’ என்ற இயக்கத்தில் இணைய அழைப்பு
இதனை தொடர்ந்து, We the leader என்ற இணைய பக்கம் மூலம் இயக்கத்தில் இணையுமாறு அண்ணாமலை அழைப்பு விடுத்தார். அவர், அறிவிப்பை வெளியிட்ட அரை மணிநேரத்திற்குள் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இணைந்தனர். சாமானியர்களுக்கான, மண் சார்ந்த அரசியலை முன்னெடுக்கப் போவதாகவும், தூரத்தில் இருந்தபடி கை காட்டப் போவதில்லை, பக்கத்து வீட்டுக்காரர்கள் போல் மக்களிடம் அணுக உள்ளதாகவும் அண்ணாமலை உறுதி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved