Also Watch
Read this
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. வரும் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

2 தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டி
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்து உள்ளனர். இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி...
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி - நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் கூறி இருப்பதாவது;
தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன் வைப்பதுண்டு. இடைத்தேர்தல் நடத்தி எம்எல்ஏவை தேர்ந்தெடுத்த பிறகு, தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று, 1967 முதல் 2018ஆம் ஆண்டு வரை பல உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்து உள்ளது. இதனால், தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது.
இவ்வாறு மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம்;
தேர்தல் வழக்குகள் குறித்த ஆவணங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கப் பெறவில்லை. அதனால், இந்த வழக்கில் நிலைப்பாட்டை தெரிவிக்க இயலாது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்;
தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து உள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்யும் போது, எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை.

முதல்வர் விஜய் தரப்பு;
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் வாக்காளாராக இல்லாத மனுதாரர், இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும்.

நீதிபதிகள் உத்தரவு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது;
தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக் கூடாது என்றும், நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அது வேறு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருந்தால், எப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும்? நிலுவையில் வழக்கு இல்லாதபோது ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது கட்டாயம் தான். அதே நேரத்தில் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், அங்கே எப்படி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியும்?

நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்
இடைத்தேர்தலில் புதிய வேறு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது? அதனால் சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 31ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், சட்டமன்ற செயலாளர், முதல்வர் விஜய் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.