Also Watch
Read this
நாமக்கல் மாவட்டத்தில், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரூ.6.55 ஆக முட்டை விலையை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.7.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய உச்சத்தில் முட்டை விலை
தமிழ்நாட்டில், முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவான NECC அறிவிப்பின்படி, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 6 ரூபாய் 55 காசுகளாக உள்ளது. இதனால், சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு முட்டையின் விலை சுமாராக ரூ.7.30 முதல் ரூ.7.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தேவை அதிகரிப்பு, விலை உயர்வு
தொடர்ச்சியாக, முட்டை விலை உயர்ந்து வருவது கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே உற்பத்தி செலவு அதிகரித்தும், விற்பனை விலை குறைவாக இருந்ததால், பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது தேவை அதிகரித்து உள்ளதால், முட்டை விலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக, கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

விலை உயர்வுக்கு என்ன காரணம்?
* சத்துணவுத் திட்டத்திற்காக அதிகளவில் முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், சந்தையில் முட்டையின் தேவை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
* கடும் வெயிலின் தாக்கம் காரணமாக, முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக முட்டை உற்பத்தி அளவு குறைந்து வருகிறது.

* வடமாநிலங்களில் தற்போது மழைக்காலம் நிலவி வருவதால் அங்கு முட்டைக்கான தேவை அதிகரித்து வருகிறது.
* தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிகளவில் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனாலும், முட்டை விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக, பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
* வெளி நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி அதிகரித்து உள்ளதால் உள்நாட்டு சந்தையில் கிடைக்கும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அடுத்தடுத்து விலை உயர்வு
தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு, ஏற்றுமதி உயர்வு , வடமாநில சந்தைகளில் நிலவும் கூடுதல் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மீண்டும் முட்டை விலையை உயர்த்தி உள்ளது. மேலும், தற்போதைய சந்தை நிலவரத்தை பார்க்கும் போது, அடுத்தடுத்த நாட்களிலும் முட்டை விலை, மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் கூறி உள்ளனர். இதனால் சந்தையில் தொடர்ந்து, முட்டை விலை உயர்வு நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.