Also Watch
Read this
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கி உள்ளது.

118 இடங்களை நோக்கி...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு ஆளுநர் கேட்டிருந்தார்.

ஆதரவு கோரிய தவெக
இந்நிலையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மே 8ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து ஆட்சி அமைப்பதற்கு தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து உள்ளது.

ஆதரவுக் கடிதம் வழங்கிய இ.கம்யூ.
இதற்கான ஆதரவு கடிதத்தை தவெக எம்எல்ஏ சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வழங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து மற்றும் தளியில் போட்டியிட்ட ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தவெக ஆட்சியமைக்க இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மார்க்சிஸ்ட் மற்றும் விசிக கட்சிகள் இன்று தங்களின் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன. இறுதி முடிவு இன்று மாலைக்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.