Also Watch
Read this
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பிரபல ராப் பாடகர் அறிவு சென்னை தலைமைச்செயலகம் முன்பு ஆவேசமாக குரல் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை போலீசார் வலுக்கட்டாயமாக காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். ஏற்கெனவே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தான் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பாடகர் அறிவரசுவின் போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.

தலைமைச்செயலகத்தில்...
தலைமைச்செயலகம் முன்பு வந்து கருப்பு ஆடையில் எதிர்ப்பு முழக்கமிட்ட "எஞ்சாயி எஞ்சாமி" பாடல் புகழ் தெருக்குரல் அறிவை ஏஞ்சாமி? என்ன பிரச்சினை? என சிலநிமிடங்களிலேயே நேரில் அழைத்து ஆதங்கத்தை கொட்ட வாய்ப்பு கொடுத்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. என்ன நடந்தது?

தெருக்குரல் அறிவு...
ராப் (Rap) இசை மேட்டுக்குடியினருக்கு மட்டுமானது என்ற பிம்பத்தையே உடைத்து விளிம்புநிலை மக்களுக்கான குரலாக ஒலிப்பவர்தான் பாடகர் அறிவு. சாதிய ஏற்றத்தாழ்வு, விவசாயிகள் பிரச்சனை, துப்புரவு தொழிலாளர்களின் சிரமங்கள் என சமூகப் பிரச்சனைகளை தனது பாடல்கள் மூலம் மிக அழுத்தமாக வீதிகளில் நின்று வெளிப்படுத்தியதாலேயே இவருக்கு தெருக்குரல் அறிவு என்ற பெயர் வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில், "உரிமை மீட்போம்" என்ற பாடல் மூலம் திரையுலகில் காலடி வைத்த அறிவு, மாஸ்டர் படத்தின் வாத்தி ரைடு பாடல் மூலம் குட்டி வாண்டுகளைகூட ஆட்டம்போட வைத்தார்.

பட்டி தொட்டி எங்கும் எஞ்சாமி...
இதையெல்லாம்விட பாடகிகள் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளுடன் சேர்ந்து பாடிய "என்ஜாய் எஞ்சாமி" பாடல்தான் அறிவுக்கு உலகப்புகழின் உச்சியை தொட்டு முத்தமிட வைத்தது. இயற்கை, மண், விவசாயம் மற்றும் பழைய தலைமுறையை புதிய தலைமுறையுடன் இணைக்கும் ஒரு கருப்பொருளை பிரதிபலிக்கும் வகையில் இருந்த அந்த பாடலை பல் இல்லாத பாட்டிகள் கூட தலையாட்டி ரசித்தனர்.

முதலமைச்சர் முன்பு...
ரசிகர்களை தனது பாடல் வரிகளாலும், குரலாலும் கட்டிப்போட்டுள்ள அறிவு தமிழக வெற்றிக்கழகம் அரசியல் களத்தில் கால்பதித்தபோது அக்கட்சிக்காக சித்தாந்த பாடலையும் பாடி முதலமைச்சர் விஜய்யின் ரசிகர்களை நரம்பு புடைக்க வைத்தார். அதேபோல், சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட முதலமைச்சர் முன்பு முற்போக்கு சிந்தனைகொண்ட பாடல்களை பாடி உள்ளார் அறிவு.

நீட் தேர்வு ரத்துக்காக...
இப்படி திரைத்துறையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பாடகர் அறிவு, கருப்பு உடையணிந்து சென்னை தலைமை செயலகத்திற்கு வந்துள்ளார். நீட் தேர்வு ரத்து குறித்து பேசுவதற்காக முதலமைச்சரை சந்தித்து பேச வேண்டும் என அங்கிருந்த காவலர்களிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு, சில நடைமுறைகள் உள்ளது, நினைத்தவுடனே எல்லாம் பார்க்க முடியாது என காவலர்கள்கூற, பலமுறை கேட்டுப்பார்த்தும் அனுமதி கிடைக்காததால் கடுப்பான பாடகர் அறிவு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திடீரென முழக்கமிட ஆரம்பித்தார்.

காவல் வாகனத்தில்...
ஏற்கெனவே, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், பேரணி நடத்தும்போது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் தடுத்தனர். இதில் பல மாணவர்கள் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இந்த பரபரப்பு சம்பவத்திற்கு மத்தியில் பாடகர் அறிவு நீட்டுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஆவேசமாக குரல் எழுப்ப, அவரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து விசாரணைக்காக காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர் போலீசார்.

அமைச்சர் ஆதவ் உடன் சந்திப்பு
இந்த சம்பவம் அடுத்த சில நிமிடங்களிலேயே பாடகர் அறிவு, குரல் எழுப்பியது குறித்து அறிந்த முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை அழைத்து பாடகர் அறிவை அழைத்து பேசுமாறு கூறியிருக்கிறார். இதன்படி காவலர்களும் அழைத்துவர, ஏற்கெனவே நன்கு பரிட்சயமான முதலமைச்சரிடம் நேரில் பேசாமல் ஏன் போராட வேண்டும்? என நியூஸ் தமிழ் செய்தியாளர் ஜெரி பாடகரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, நீட் தேர்வை தடை செய்ய வேண்டும், மாணவர்களை அடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு அமைச்சரை சந்திக்க சென்றார் அறிவு.

குரலில் ஒரு நியாயம்
இதனை தொடர்ந்து, ”என்ன கொற என்ன கொற என் சீனி கரும்புக்கு என்ன கொற” என எஞ்சாமி பாடலில் வரும் வரியைபோன்றே அமைச்சர் ஆதவும் பாடகர் அறிவிடம் என்ன குறை என விசாரித்துள்ளார். அதன்பிறகு தனது கோரிக்கையை முதலமைச்சரிடம் கூறிய அறிவு அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பாடகர் அறிவை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கவன ஈர்ப்புக்காகவே இந்த போராட்டத்தில் அறிவு ஈடுபட்டதாக சொல்லப்பட்டாலும் அவரது குரலில் ஒரு நியாயம் இருப்பதாகவே மாணவர்களின் மத்தியில் பேசப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved