Also Watch
Read this
By: Web Team

தெரு நாய்கள் குறித்த சர்ச்சை, தொலைக்காட்சி விவாதத்தில் தொடங்கி, உச்ச நீதிமன்றம் வரை விவாத பொருளாக மாறிவிட்டது. ஆனால், இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார், சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.
மக்களவையில் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது;
இந்தியாவில் 6 கோடி தெரு நாய்கள் உள்ளன. ரேபிஸ் (rabies) எனப்படும் வெறி நாய்க்கடி தடுப்பூசிக்காக ஆண்டுக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா செலவிடுகிறது. உலகில் உள்ள ரேபிஸ் நோயாளிகளில் 36% பேர் இந்தியாவில் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய அளவிலான சிறப்புக் குழுவை பிரதமர் மோடி அமைக்க வேண்டும்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரத்தோட குரல் ஒலித்தது.

இதுமட்டுமின்றி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக மனு கொடுத்தார். இது தொடர்பாக சமூக வலை தளத்திலும் பதிவிட்டார்.
"பிரதமரை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, தெரு நாய்களால் அதிகரித்து வரும் பிரச்னை குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தேன். தெருநாய் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் மட்டும் சுமார் 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன.
"இந்தியாவில் ’ரேபிஸ்’ நோய் தொற்று பரவலும் அதிகமாக உள்ளது. உலகளவில் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நிகழ்கிறது. விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (Animal Birth Control) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதனை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இதனால், தேசிய அளவிலான அமைப்பு, உள்ளூர் நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து இந்த பிரச்சினையினை கையாள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்” என்று கூறி உள்ளார்.

இதுமட்டுமின்றி, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், சென்னை மேயர் பிரியாவுக்கும் கடிதம் எழுதினார்.
அதில், "2022-23 பட்ஜெட்டில், தமிழ்நாடு அரசு விலங்கு நலத் திட்டங்களுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கியது, ஆனால் கவனிக்கத்தக்க முன்னேற்றம் இல்லை. 2025-26 நிதியாண்டிலும், அதே தொகையை ஒதுக்கியது, ஆனால், உள்ளூர் அளவில் பயனுள்ள செயல்படுத்தல் இல்லாமல், எந்தவொரு உறுதியான முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை" என்று சுட்டிக்காட்டினார்.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் நடத்திய கணக்கெடுப்பை மேற்கோள் காட்டி, சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை 2018இல் 58,000ல் இருந்து, 2024 செப்டம்பரில் 1,81,347 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமாக, "சென்னையின் 200 வார்டுகளிலும் கருத்தடை கவரேஜில் கணிசமான மாறுபாடு இருக்கிறது. சில பகுதிகளில் 2% மட்டுமே கருத்தடை செய்யப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு பயனுள்ள அணுகுமுறையை செயல்படுத்த தவறியதை எடுத்துக்காட்டுகிறது" என்றும் கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

ஆக மொத்தம் தேசிய டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்க வேண்டும் என்று, கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி, Animal Birth Control (ABC) Rules, 2023ஐ செயல்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
’ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்குவது இருக்கட்டும், இந்த ஜி20 நாட்டிலேயே இந்தியாவில் தான் தெருநாய்கள் அதிகம்’ என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.
அடுத்த உயிர்ப்பலி நிகழ்வதற்கு முன்னர், நிரந்தர தீர்வு வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved