Also Watch
Read this
By: Web Team

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், கோடிக்கணக்கான மக்கள் பலன் அடைவார்கள் என்று, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைத் தரம், நாட்டின் பொருளாதாரத்தை உறுதி செய்யும் நடவடிக்கை என்றும் பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, முந்தைய காங்கிரஸ் அரசு, மருத்துவம் மற்றும் காப்பீட்டிற்கு கூட அதிக வரி வசூலித்ததாகவும், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் மிட்டாய்களுக்கும் வரி விதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
டில்லியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஆகஸ்ட் 15ஆம் தேதி, செங்கோட்டையில் உரையாற்றும் போது, இந்தியாவை தன்னிறைவு பெறுவதற்காக, அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என பேசினேன். இந்த தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்கு இரட்டிப்பு பரிசு கிடைக்கும் என உறுதியளித்து இருந்தேன்.

தற்போது, ஜிஎஸ்டி இன்னும் எளிதாக மாறி உள்ளது. நவராத்திரியின் முதல்நாளான செப்டம்பர் 22ஆம் தேதி அன்று, அடுத்த தலைமுறையினருக்கான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படும். 5 மற்றும் 18 சதவீதம் என்பது நவராத்திரியின் முதல் நாளன்று அமலாகும்.
இந்த சீர்திருத்தம், சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்து பொருட்களின் விலையும் குறையும். அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் இது. ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் தேவையானதாக இருந்தது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, பல ஆண்டு கனவு நனவானது. இதற்கான விவாதம், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கவில்லை. அதற்கு முன்னரே விவாதம் நடந்தது. ஆனால், அதற்கான பணிகளில் யாரும் ஈடுபடவில்லை.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக, சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், நுகர்வு அதிகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது.
இதனால், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் கிடைக்கும். வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான கூட்டாட்சி ஒத்துழைப்பை இது பலப்படுத்தும். ஏழைகள், நடுத்தர வகுப்பினர், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவர்.

காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான வரிகள் இருந்தன. மருந்து, காப்பீட்டுக்கு கூட வரி வசூலிக்கப்பட்டது. குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்களுக்கு வரி விதிக்கப்பட்டதுடன், வீட்டு உபயோக பொருள் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட்டது.
இதனால், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். நடுத்தர மக்களின் வாழ்க்கையை காங்கிரஸ் அரசு கடினமாக மாற்றியிருந்தது. அதிக வரி வசூலிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தியில் இருந்தனர்.
பாஜக அரசு அமைந்தபிறகு, இளைஞர்களின் நலனை உறுதி செய்துள்ளோம். சிறு குறு நடுத்தர தொழில் துறையினருக்கான வரி குறைக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு ஆதரவான கொள்கையே எங்களது நோக்கம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும். நாட்டின் தேவை குறித்து ஒவ்வொரு மாணவரும் அடுத்த தலைமுறையினரும் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதையும் பாருங்கள்; GST 2.0. காங். அரசு அதிக வரி வசூல் - பிரதமர் மோடி.. | GST New Tax Slab 2025