Also Watch
Read this
By: Web Team

ஜம்மு-காஷ்மீரில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தில், மிச்சைல் மாதா துர்க்கை கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இன்றும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மிச்சைல் துர்க்கை கோயிலுக்கு வந்திருந்தனர். இந்நிலையில், நண்பகல் 12 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து, சில நிமிடங்களில் மேகவெடிப்பு நிகழ்ந்து, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மழை அருவி போல கொட்டியது. இதனால் சிறிது நேரத்திலேயே வெள்ளம் சூழ்ந்ததால், பக்தர்கள் பயத்தில் அலறினர்.
தண்ணீர் மட்டும் அதிகரிக்க தொடங்கியதால், பலர் வெள்ளத்தில் சிக்கினர். தகவல் அறிந்து, பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கிஷ்த்வார் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இறந்த 17 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 45 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோஸ்டி பகுதியில் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் மாதா துர்க்கை கோயிலை நோக்கி நடத்தப்படும் புனித யாத்திரை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved