Also Watch
Read this
By: Manigandan Raja

மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா :
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்குட்பட்ட நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி (பூக்குழி) திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் உற்சவர் ஸ்ரீ மாரியம்மனை மேளதாளங்கள் முழங்க தோளில் சுமந்தவாறு ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோசத்துடன் தீமிதி (பூக்குழி) திருவிழாவில் பங்கேற்றனர்.
நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்ற ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தவாறு தீமிதி திருவிழாவில் பங்கேற்ற காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினார்.
திருவிழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானமும், நீர்மோர், கம்மங்கூழ் உள்ளிட்ட பிரசாதமும் வழங்கப்பட்டது.
வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.