Also Watch
Read this
அதிமுகவை தீர்ந்து போன சக்தி என்று கூறிவிட்டு அவர்களிடமிருந்தே எம்.எல்.ஏ.க்களை ஷாப்பிங் செய்யும் முதலமைச்சர் விஜய், எவ்வளவு பெரிய காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். திமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தாம் டெல்லி சென்ற போது, ED வழக்கில் இருந்து தப்பிக்க போனதாக கூறிய முதலமைச்சர் விஜய், இப்போது கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தான் டெல்லி சென்றாரா? என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சி
திமுக மகளிரணி - மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;
எதிர்க்கட்சியாக இருக்கிற நாம், மீண்டும் ஆளும் கட்சியாக மாற வேண்டும் என்றால், சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும். தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகத் தன்னுடைய கடமையை உறுதியாகச் செய்யும். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம். கேள்விகளைப் கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும், மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.

தவெக ஷாப்பிங்...
பொதுவாக, எல்லோரும் ஷாப்பிங் போனால், டிரெஸ் வாங்குவார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால், இப்போது நம்முடைய முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? அ.தி.மு.க. எம்எல்ஏக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். அவர் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிற மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க. எம்எல்ஏக்களை த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். இப்போது, அவர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அடுத்த நொடியே தன்னுடைய கட்சியில் இணைத்திருக்கிறார்.

பாஜகவின் ஜெராக்ஸ்
பா.ஜ.க. மற்ற மாநிலங்களில் செய்வதையே இங்கு முதலமைச்சர் விஜய் செய்து கொண்டிருக்கிறார். அதாவது, பா.ஜ.க.வின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படுகிறார். உதவி என்று கேட்டபோது அவருக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் எல்லாம், இதைப் பற்றிப் கேட்கும்போது, தர்மசங்கடத்தில் தவிக்கிறார்கள்.
மை அழிவதற்குள்...
ஒரு கட்சியில் பல பேருக்கு இடையில் ஒருவருக்குத் தான் வேட்பாளராக வாய்ப்பு கிடைக்கிறது. எத்தனையோ தொண்டர்கள் உழைக்கின்றனர். கூட்டணிக் கட்சிகளும் வெற்றிக்காக உழைக்கின்றனர். இத்தனை பேரின் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, வாக்குப்பதிவின் போது கைவிரலில் வைத்த மை அழிவதற்குள், ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுக்கின்றனர். ஜனநாயக சக்திகள் நியாயமாக இதைக் கேள்வி கேட்க வேண்டுமா, வேண்டாமா? ஒரே மாதத்தில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் சேர்கிறார்களே, அந்தளவுக்கு அப்படி என்ன ஆஃபர் த.வெ.க.வில் கிடைத்திருக்கும் என்று பேச வேண்டுமா வேண்டாமா?

பொதுமக்களின் பாதுகாப்பு
தீர்ந்து போன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார். தீர்ந்துபோன சக்தியிடமே திருடுகிற இவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள். பாலியல் வன்முறை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என்று நடப்பதையெல்லாம் பார்த்தால், யாராலாவது விமர்சிக்காமல் இருக்க முடியுமா? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு டைம் தரலாம்; ஆனால், பொதுமக்களுடைய பாதுகாப்பு பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?

டில்லி சென்றது ஏன்?
நான் முதலமைச்சராக இருக்கும்போது, டெல்லி சென்று பேசியபோது, இப்போது முதலமைச்சராக இருக்கிறவர் என்னவெல்லாம் பேசினார் என்று தெரியுமா? அவருக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகப் போனார்கள், பா.ஜ.க. காலில் விழுந்து மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறார்கள், அதனால்தான் குரூப் ஃபோட்டோ எடுக்கும்போது முன்வரிசையில் நிற்க ஸ்டாலினுக்கு இடம் கொடுத்தார்கள். இதெல்லாம் யார் சொன்னது? அவர் சொன்னது.

கரூர் வழக்கில் இருந்து தப்பவா?
இப்போது நீங்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள், நான் கேட்கவா? இப்போது நான் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். Mr. Chief Minister, மாண்புமிகு முதலமைச்சர், கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பா.ஜ.க.வை உறுதியாக விமர்சித்துப் பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியை எல்லாம் கேட்டு, ஒரு முதலமைச்சராக நீங்கள் அரசு கூட்டத்தில் கலந்து கொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.

அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்
நம்மிடம் வரலாறு இருக்கிறது, கொள்கை இருக்கிறது, சாதனை இருக்கிறது, எதிர்காலத்திற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. இது எல்லாவற்றையும் அவர்களுக்குப் புரிகிற மாதிரி சொல்லுங்கள். புரிந்து கொள்ள ஆரம்பித்தால், மக்கள் நிச்சயம் தி.மு.க.வை நோக்கித்தான் வருவார்கள். அதற்கான பொறுப்பும் கடமையும் மகளிரணியினரான உங்களிடம்தான் இருக்கிறது. தி.மு.க.வின் பயணம் தொடர உங்களுடைய உழைப்பைக் கொடுங்கள், கொடுங்கள், கொடுங்கள், உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved