Also Watch
Read this
நீட் எதிர்ப்பு, மேகதாது அணை விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி, எதிர்க்கட்சியினர் 3ஆவது நாளாக கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்தடுத்து ஒத்திவைப்பு
மக்களவை இன்று கூடியதுமே, காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் போராட்டம் மீதான காவல் துறை அடக்குமுறை விவகாரங்களை எழுப்பினார். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர், அகிலேஷ் மோதல்
அப்போது பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து அரசு விவாதத்துக்கு தயாராக உள்ளது.

எந்த மாதிரியான விவாதம், எப்போது நடத்தலாம்? என்பதை அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவெடுக்கலாம்," என்று தெரிவித்தார்.

உடனே, அகிலேஷ் யாதவ், “இது, அரசியல் கட்சிகளின் விவகாரமல்ல. இது இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்தது. இதில் ஏன் பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கூடாது? நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசுபவர் உள்ளேயும் பேசலாமே” என்று கூறினார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடிய போதும், அமளி நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. முதலில் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல், பிரியங்காவுக்கு செய்த காரியத்துக்கு வருந்துவீர்கள்...
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது;
இது, ஜனநாயகமான அரசு இல்லை என்று, நான் நேற்றே கூறினேன். அவர்கள் சர்வாதிகாரிகள் போல் செயல்படுகின்றனர். எம்பிக்கள் மீது எந்த மரியாதையும் இல்லை. சட்டப் போராட்டங்களை கூட ஒடுக்குகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் பேட்ஜ் இல்லாத காவலர்களாக செயல்படுகின்றனர்.

மாணவர்களை அச்சுறுத்தி உள்ளனர். எங்களது மூத்த தலைவர்களை நீங்கள் நசுக்க நினைத்தால் லட்சக்கணக்கானோர் திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். உங்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நாங்கள் தொடர்ந்து போராடப் போகிறோம். ராகுல், பிரியங்காவுக்கு நீங்கள் செய்த காரியத்துக்கு வருந்துவீர்கள்.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved