Also Watch
Read this
கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். கைதி மயங்கி விழுந்ததால் தான் காயம் ஏற்பட்டதாக கூறும் காவல்துறை விளக்கத்தை ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறி உள்ளார்.
அதிர்ச்சி, வேதனை...
இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி கூறி இருப்பதாவது;
தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால், சட்ட விரோத மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் தலை உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சி, வேதனை அளிக்கிறது. அருணாச்சலத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காணொலி வாக்குமூலம்
மது வணிகம் செய்ததாக கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்ட அருணாச்சலம் அன்று மாலையே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். 3 காவலர்கள் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக அவர் அளித்த காணொலி வாக்குமூலத்தையும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டு உள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது அருணாச்சலம் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு உறுதியாவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சட்டப்படி நடவடிக்கை...
தூத்துக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட போது நன்றாக இருந்த அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. ஏற்கெனவே நாகர்கோயில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி சிறைத் துறையினரால் தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதட்டம் தீரும் முன்பே இன்னொரு விசாரணைக் கைதி, மர்மமான முறையில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.