Also Watch
Read this
செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் முன், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் ஆஜராகி, ஈரான் உடனான போர் நிதி மற்றும் ராணுவ உத்திகள் குறித்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார். மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் என்ன பேசப்பட்டது?
அமெரிக்கா vs ஈரான்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் முன்னிலையில் ஒரு முக்கிய விசாரணை அரங்கேறி உள்ளது. அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் மற்றும் கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் இக்குழுவின் முன் ஆஜராகி, ஈரானிய போருக்கான கூடுதல் அவசர நிதி கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது, செனட் உறுப்பினர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளால் அந்த இடமே, போர்க்களமாக மாறியது.

சுமார் 3.1 லட்சம் கோடி ரூபாய்...
விசாரணையின் தொடக்கத்திலேயே, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் ஒரு அதிர்ச்சிகரமான உண்மைத் தகவலை வெளியிட்டார். இதுவரை ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்காவிற்கு 37.5 பில்லியன் டாலர் சுமார் 3.1 லட்சம் கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். ஏப்ரல் மாத இறுதியில் மதிப்பிடப்பட்ட 25 பில்லியன் டாலரை விட இது மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு நில்லாமல், போரைத் தொடரவும், ஆயுதக் கிடங்குகளை நிரப்பவும் மேலும் 67 பில்லியன் டாலர் கூடுதல் அவசர நிதி வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சரமாரி கேள்வி எழுப்பிய...
அரசின் இந்த நிதி கோரிக்கையை செனட் உறுப்பினர்கள், குறிப்பாக ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். செனட்டர் பட்டி முர்ரே (Patty Murray) பேசுகையில், ’இந்த அரசு ஆப்கானிஸ்தான், ஈராக் போல மீண்டும் ஒரு முடிவில்லா போரை உருவாக்குகிறது. இந்த நிதி கோரிக்கை எந்த வகையிலும் நியாயமற்றது,’ என்று சாடினார். செனட்டர் ஜீன் ஷாஹீன் , ’கடந்த ஆண்டு ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட 150 பில்லியன் டாலரில் பாதி இன்னும் செலவு செய்யப்படாமல் இருக்கும் போது, மக்கள் ஆதரிக்காத ஒரு போருக்காக ஏன் மேலும் பணம் கேட்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். செனட்டர் கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் , ஈரானின் ஏவுகணை திறன்களை முற்றிலும் அழித்துவிட்டதாக முன்பு பொய் வாக்குமூலம் அளித்ததாக ஹெக்ஸெத் மீது குற்றம் சாட்டினார்.

முந்தைய அரசு மீது புகார்
செனட்டர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு பீட் ஹெக்ஸெத் காரசாரமாக பதிலடி தந்தார். இந்த கூடுதல் நிதி உடனடியாகக் கிடைக்காவிட்டால், அமெரிக்க ராணுவ வீரர்களின் தற்போதைய மற்றும் எதிர்காலப் பயிற்சிகள் முற்றிலுமாக முடக்கப்படும் என்று எச்சரித்தார். ராணுவ பற்றாக்குறைக்கு தற்போதைய அரசு காரணமல்ல என்றும், முந்தைய பைடன் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டினார். ஈரானின் அணுஆயுத தளங்களை அமெரிக்கா தகர்த்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதால் அவர்களின் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை அழிக்க வேண்டியது அவசியமாகிறது என்று விளக்கினார்.

அரசியல் புயல்...
விசாரணையின் இறுதி நிமிடங்களில், செனட்டர் கேரி பீட்டர்ஸ், ’ஒரு தலைவராக நீங்கள் முற்றிலும் தோல்வியடைந்து விட்டீர்கள், உங்களால் அமெரிக்க வீரர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்,’ என்று ஹெக்ஸெத்தை நோக்கி நேரடியாகக் கூறினார். இதனால் கோபமடைந்த ஹெக்ஸெத், ’உங்களுக்கு டிரம்ப் மீதான வெறுப்பு நோய் முற்றிவிட்டது, வெட்கக்கேடு,’ என்று கத்தினார். சுமார் 3.5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த செனட் விசாரணை இறுதியில் பெரும் கூச்சல்களுடனேயே முடிவுக்கு வந்தது. ஈரான் உடனான போரில் மேலும் மூன்று அமெரிக்க வீரர்கள் அண்மையில் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிதி நெருக்கடி மற்றும் போர் உத்தி தொடர்பான விவாதம் அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.