Also Watch
Read this
முதலமைச்சர் விஜய்க்கு தைரியம் இருந்தால், கட்சி நிதியை யார் கொடுத்தார்கள்? யாருக்கு கொடுத்தார்கள்? என்று சொல்லட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார். அவை முடிந்ததாக சபாநாயகர் கூறிய பின் வீட்டுக்கு போய் பார்த்தால், டிவியில் அமைச்சர் பேசிக் கொண்டிருப்பதாகவும் சாடினார்.
தவெக ஆட்சியின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்
தவெக ஆட்சியின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில், இன்று ஜூன் 23ஆம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அவர் பேசியதாவது;
சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அக்கறையோடு கேட்பதாக தெரியவில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் செய்வது அவதூறு அரசியல். இப்படி அவதூறு செய்பவர்களை பார்த்து, ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். கடந்த 10 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை. போதைப்பொருள் நடமாட்டத்தை தொடக்கத்திலேயே யார் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். காவல் துறையை கையில் வைத்திருந்தவர்கள் ஏன் கட்டுப்படுத்தவில்லை?

பெட்டி பெட்டியாக பணத்தை...
நம் ஆட்சிக்கு நிர்வாகத் திறன் இல்லை எனக் கூறுகின்றனர். ஊரை அடித்து உலையில் போட்டு, ஊழல் மேல் ஊழல் செய்து, அதிலிருந்து தப்பிப்பதற்கு பெயர் தான் நிர்வாகத் திறன் என்றால், அதுபோன்ற நிர்வாகத் திறனை நம் அரசு ஒரு போதும் செய்யாது. பெட்டி, பெட்டியாக பணத்தை வைத்துக்கொண்டு, போதைப்பொருள் பாதுகாவல் கழகம் செய்த ஒவ்வொரு ஊழலும் வெளியில் வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
டாஸ்மாக் பேச்சு, எதிர்ப்பு, அமளி
தொடர்ந்து முதல்வர் விஜய், டாஸ்மாக் குறித்து பேசியபோது, திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடும் அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு தவெக எம்.எல்.ஏக்களும் அமளியில் ஈடுபட்டனர்.

அனல் பறந்த விவாதம்
அப்போது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "முதல்வர் பேசி முடித்த உடன், உங்களுக்கு அவகாசம் தருகிறேன், எதிர்க்கட்சித் தலைவர் பேச வாய்ப்பு தருகிறேன்" என்று திமுகவினரிடம் கூறினார். ஆனாலும், அமளி தொடர்ந்து அதிகமானது. அப்போது அவைத் தலைவரும் அமைச்சருமான செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் அமைதிப்படுத்துமாறு, சில விளக்கங்களை தந்தனர்.
தொடர் அமளி
இதற்கு பின்னரும், திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், "எதிர்க்கட்சித் தலைவர், உங்கள் கட்சி உறுப்பினர்களை அமைதிப் படுத்த வேண்டும்" என்று சபாநாயகர் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சில கருத்துக்களை கூறினர்.

உதயநிதி சவால்
அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;
நேற்று நான் பேசும்போது சில அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசினர். அதற்கு நீங்கள் அனுமதி தந்தீர்கள். அதுபோல இன்று முதல்வர் பேசும் போது, சில தவறான வார்த்தைகளை கூறி உள்ளார். கட்சி நிதி எனக் கூறி உள்ளார். தைரியம் இருந்தால் எந்தக் கட்சி நிதி என கூறுங்கள். ஆதாரத்தோடு சொன்னால் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நேற்று நான் பேசி முடித்தவுடன், அவை முடிந்துவிட்டது என்று சொன்னீர்கள். நாங்கள் வீட்டுக்கு சென்று விட்டோம். வீட்டில் போய் டிவியில் பார்த்தால் இன்னொரு அமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார். இது என்ன மரபு? நீங்கள் பேசுவதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா? முதல்வர் ஆதாரத்தோடு குற்றச்சாட்டு சொன்னால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.

திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், "முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றால், ஆய்வு செய்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும்," என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், “பல துறைகளில் கட்சி நிதி என கொள்ளை அடிக்கப்பட்டது, இப்போது அரசின் கஜானாவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மக்கள் பணத்தை தொட விடமாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம். ஒவ்வொரு ஊழலும் வெளியில் வரும்," என்று தமது உரையை தொடர்ந்தார். அப்போது, முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
முதலமைச்சர் விஜய் உரை முடிந்த உடன், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.