news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தள்ளிப் போகும் ராகுல் விசிட்
tv

Also Watch

tv

Read this

தள்ளிப் போகும் ராகுல் விசிட்

எடுத்த முடிவில் இருந்து மாறாத திமுக?

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆட்சியில் பங்கு என்ற வார்த்தையை சட்டை செய்யாத திமுகவைவிட அதிகாரத்தில் பங்கு உறுதி எனக்கூறியுள்ள த.வெ.க. உடன் கூட்டணி வைப்பதே மேல் என காங்கிரஸ் கட்சியினர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், உங்களையே வளர்த்துவிட்ட எங்களுக்கு நீங்கள் இல்லாமலேயே வெற்றிவாகை சூட முடியும் என திமுகவினரும் முடிவெடுத்துவிட்டதாக அரசியல் நிலவரம் கூறுகிறது.

கூட்டணியில் இடியாப்ப சிக்கல்
ஒவ்வொரு தேர்தலிலும் எந்த அரசியல் கட்சியினருடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், காங்கிரஸ் மட்டும் திமுகவு உடன் தான் எப்போதுமே கைகோர்க்கும், அதில் எந்த மாற்றமும் இல்லையென அரசியல் அரிச்சுவடி தெரியாத சிறுபிள்ளைகூட கண்ணை மூடிக்கொண்டு சொல்லும். ஆனால், ”எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்பதுபோல தற்போது காங்கிரஸ், திமுக இடையேயான கூட்டணியில் தான் இடியாப்ப சிக்கலே.

ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் - திமுக
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், தேனி ஒரு தொகுதியை தவிர புதுச்சேரி உள்ளிட்ட 39 இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதேபோல், 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களை தங்களுக்கு சொந்தமாக்க, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சியினர் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில் இந்தியாவிலேயே ஒரு கூட்டணி கட்சியில் அதிக எம்பிக்களை காங்கிரஸ் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு தான் உள்ளது. இப்படி கூட்டணி கட்சி வலுவாக மாற முக்கிய காரணமே திமுக அவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் தான். கூட்டணியில் உள்ளவர்களின் மனம் கோணாமல் பார்த்துக்கொண்ட திமுக, 2019ஆம் ஆண்டு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்தது.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடஒதுக்கீடு
கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினோமா, அதன்பிறகு தங்கள் வேலையை பார்த்தோமா என்றில்லாமல் அவர்களுக்கான பாக முகவர், தேர்தல் பணிகள், பிரச்சாரம், இணையதள அணிகள், தேர்தல் செலவு என அத்தனையிலும் கூடவே இருந்து வழிநடத்தியது திமுக தான். அதற்குமே, திமுகவினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் சமாளித்து காங்கிரஸை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டதோடு வெற்றியும் பெற வைத்தது திமுக. இவ்வளவு இருந்தும், வரும் தேர்தலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடஒதுக்கீடு என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், கரூர் எம்பி ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் குரல் கொடுத்து வந்தனர். இந்த குரல் தான் கூட்டணியிலேயே ஆட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை
கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், வரும் தேர்தலில் 39 தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது. அதற்கு கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளதால் 22 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என அழுத்தமாக முதலமைச்சர் கூறியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சிஐடி காலனியில் எம்.பி. கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் கூடுதல் தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதிலும், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் கொந்தளித்த கிரிஷ் சோடங்கர், நாங்கள் லாப நஷ்டத்தை எதிர்பார்க்காத என்ஜிஓ நடத்தவில்லை எனவும் ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை எனவும் பேசினார். இந்த பேச்சு திமுகவினரை கடுப்பில் ஆழ்த்தி உள்ளதாம்.

திமுக கோபத்திற்கு காரணம் தவெக
ஒரே ஒரு தொகுதியை வைத்துள்ள கட்சியைகூட எளிதாக பார்க்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் திமுக, அந்த ஒரு தொகுதிக்கான கட்சியினர்கூட பொதுவெளியில் குறைபட்டுக் கொண்டால் அவர்களை நேரில் அழைத்து சமாதானப்படுத்திய கதைகளும் உண்டு. அப்படி இருக்கும்போது கூட்டணியின் நம்பிக்கை நட்சத்திரமாக காங்கிரஸ் கட்சியை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவார்களா? என்ற கேள்வி எழும். ஆனால், காங்கிரஸ் மீது திமுக தற்போது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். உரிமையை கேட்பதில் தவறில்லை, ஆனால் த.வெ.க. பக்கம் கையை நீட்டி அங்கு சென்றுவிடுவோம் எனக் கூறுவது தான் திமுக தரப்பை கோபத்தில் சூடாக்கி உள்ளதாம்.

திருமாவை அழைத்த விஜய்
கூடுதல் இடங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கவில்லையா? அல்லது விசிக தான் வைக்கவில்லையா? கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுமே கூடுதல் இடங்கள் கேட்கத்தான் செய்வார்கள், ஆனால் யாரும் அந்த கட்சிக்கு போய்விடுவோம், இந்த கட்சிக்கு போய்விடுவோம் என டிமாண்ட் செய்ததில்லை எனக்கூறும் திமுக தரப்பு, விக்கிரவாண்டி மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், பொதுவெளியில் நேரடியாகவே விசிக தலைவர் திருமாவை கூட்டணிக்கு அழைத்தார், அதுவும் ஆட்சியில் பங்கு என்ற தூண்டிலை போட்டு தான் அழைத்தார், ஆட்சியில் பங்கு என்றதும் திருமா ஓடிவிட்டாரா? என தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்களாம். இந்த அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், ”இல்லாத ஊருக்கு வழி கேட்பதுபோல்தான் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை அறியாமலேயே பங்கு கொடுக்கிறோம் என விஜய், திருமாவை அழைப்பதாக கிண்டலும் செய்கின்றனர் திமுகவினர்.

ராகுல்காந்தி வருகை எப்போது?
ஆக மொத்தத்தில், உரிமையை கேட்கலாம், டிமாண்ட் செய்தால் யாராக இருந்தாலும் பணிய மாட்டோம் என திமுக உறுதியாக நிற்க, பதிலுக்கு காங்கிரசும் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம் என விடாப்பிடியாக இருக்க காங்கிரஸ் இல்லாத கூட்டணியை அமைக்க திமுக தயாராகிவிட்டதாம். அதேபோல் கூடுதல் தொகுதிகளுக்காக த.வெ.க. பக்கம் செல்ல காங்கிரசும் முடிவெடுத்துவிட்டதாம். இதற்கு மத்தியில் வரும் மார்ச் 5ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருவதாகவும், அவரது வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து காணொலி வாயிலாக ஆலோசனையும் நடத்தப்பட்டிருந்தது. தற்போது, அவரது தமிழக பயணம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாம். கூட்டணி தொகுதி பங்கீட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தபிறகே ராகுல் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Link
மார்ச் 1 பிறந்தநாள் - முதல்வர் வேண்டுகோள்

மார்ச் 1 பிறந்தநாள் - முதல்வர் வேண்டுகோள்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
7 hrs 32 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved