Also Watch
Read this
கரூர் துயர சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் 15ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இன்று மார்ச் 10ஆம் தேதி, ஆஜராகுமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று, கால அவகாசம் தரப்பட்டு உள்ளது. ஆனால், கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணையை சென்னைக்கு மாற்ற மறுப்பு தெரிவித்து, டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வரும் 15ஆம் தேதி ஆஜர் ஆகுமாறு சம்மனில் கூறப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி துயரம்
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, தவெக தலைவர் விஜய், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

சம்மன் பெற்ற விஜய்
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று மார்ச் 10ஆம் தேதி, ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், வேறொரு தேதியில் டில்லிக்கு பதிலாக, சென்னை அல்லது சென்னைக்கு அருகே ஆஜராக புதியதாக சம்மன் அனுப்பினால், நேரில் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்றும், விஜய் சார்பில் சிபிஐக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை பரிசீலித்து, அவர் ஆஜராகாமல் இருக்க சிபிஐ விலக்கு அளித்தது.

விஜய் கோரிக்கை நிராகரிப்பு
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. திட்டமிட்ட பணிகள் இருப்பதால், விஜய் தரப்பில் 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதை சிபிஐ நிராகரித்து விட்டது. வரும் 15ஆம் தேதி ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. கரூர் துயர சம்பவம் தொடர்பான விவகாரத்தில், டெல்லிக்கு பதில் சென்னையில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என விஜய் சார்பில் சிபிஐயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், விஜய்யின் கோரிக்கையை சிபிஐ நிராகரித்து விட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved